முறையான கணக்கு வைத்திருப்பதால் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினாலும் எந்த பிரச்னையும் இல்லை என முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வழக்கறிஞர் செல்வம் தெரிவித்துள்ளார். வழக்கு பதிவு என்பது வழக்கமான நடைமுறைதான் எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக கரூர் மாவட்டத்தில் எம்.ஆர் விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கரூரில் விஜயபாஸ்கரின் சகோதரர் வீடு மற்றும் ஆதரவாளர்களது வீடுகள், அலுவலங்களில் இன்று காலை முதல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 21 இடங்களிலும் 21 டிஎஸ்பிக்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமான லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறையில் பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர் அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் புகார்கள் எழுந்தன. இந்த சூழ்நிலையில் சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.