வீடு கட்டித் தருகிறோம் என்று கூறிய அதிகாரிகளின் பேச்சைக்கேட்டு குடியிருந்த குடிசைகளை இடித்துவிட்டு இருளர் இன மக்கள் தெருவில் நிற்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள பல்வேறு கிராமங்களில் வசிக்கும் இருளர் இன மக்கள் குளக்கரையில் குடிசைபோட்டு வசித்துவந்தனர். அவர்களுக்கென்று நிரந்தர வீடுகளோ, வீட்டுமனைகளோ இல்லாத நிலையில் உத்திரமேரூரை அடுத்த பாப்பான்குளம் பகுதியில் குளத்தின் கரையில் வசித்துவந்த 20-க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பங்களுக்கும் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் வசித்துவந்த சிலருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பொன்னையா அவர்களால் ஆணைப்பள்ளம் என்னும் இடத்தில் வீட்டுமனை பட்டா கொடுக்கப்பட்டது.
தற்போது அந்த இடத்தில் கடந்த ஒரு வருடங்களாக சுமார் 25-க்கும் மேற்பட்ட இருளர் மற்றும் பழங்குடியின மக்கள் குடிசை வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அங்கு வசிக்கும் மக்களுக்கு, அரசு பழங்குடி இனத்தவர்களுக்கான பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர உள்ளதால் குடிசைகளை உடனடியாக அகற்றி இடத்தை சுத்தம் செய்து தர வேண்டுமென வட்டார வளர்ச்சித் துறை சார்பாக கூறப்பட்டது.
இதனை நம்பிய அங்கு வசிக்கும் மக்கள் தாங்கள் வசித்துவந்த குடிசைகளை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக காலி செய்துள்ளார்கள். பசுமை வீடு கட்டுவதற்காக அப்போது அங்கு பூமி பூஜையும் போடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதன்பிறகு துறை சார்ந்த அதிகாரிகள் யாரும் அப்பகுதிக்கு வரவில்லை. இதனால் அந்த மக்கள் தாங்கள் குடியிருந்த குடிசைகளை இடித்துவிட்டு பனியிலும், வெயிலிலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களை வைத்துக்கொண்டு சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் அந்த மக்களுக்கு திடீரெனது இரண்டுநாட்கள் பெய்த பலத்த மழையால் அவர்களின் உணவு பொருட்கள் ,உடை, உடைமைகள் மற்றும் அரசு ஆவணங்கள் முற்றிலும் நனைந்து சேதமானது.
இதனால் படுப்பதற்கு இடமின்றி, சாப்பிடுவதற்கும் வழியின்றி குழந்தை குட்டிகளோடு தவித்து வருகின்றனர். தற்காலிகமாக பாதுகாப்பாக தங்குவதற்கு இடமும், உணவு தயாரிக்க தேவையான அத்யாவசிய பொருட்களும் வழங்கிட வேண்டும் என அப்பகுதி மக்கள் தாழ்மையுடன் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். மேலும் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தங்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன், விரைந்து வீடுகளை கட்டிக்கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.