தண்ணீருக்காக ஏங்கப்போகிறதா சென்னை ?

தண்ணீருக்காக ஏங்கப்போகிறதா சென்னை ?
தண்ணீருக்காக ஏங்கப்போகிறதா சென்னை ?
Published on

சென்னையில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் அடைக்கப்பட்ட கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இன்னல்களுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் திடீரென காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையை நீக்க வேண்டும், கனிம‌வள பிரிவிலிருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் சில உள்ளன. இந்த ஏரிகள் தற்சமயம் சென்னை முழுமைக்கு நீர் வழக்கும் அளவுக்கு தண்ணீர் இல்லை. ஏற்கெனவே தினம் தினம் அதிகரிக்கும் டீசல் விலை உயர்வால் தண்ணீர் லாரிகளின் விலை ஏற்றம் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் நேற்று மாலை முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். குடிநீர் கேன் உற்பத்திக்காக நிலத்தடி நீரை எடுக்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை விலக்க வேண்டும் என தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

தமிழகம் முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தியை நிறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் பெரும்பாலான பகுதிகளில் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவடங்களில் மட்டும் சுமார் 450 கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளனர். இந்த 3 மாவடங்களில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 2 கோடி லிட்டர் குடிநீர் சென்னை பெருநகரப் பகுதியில் விநியோகம் செய்யப்படுகிறது. அதில் 20 லிட்டர் கேன் ஒன்று சுமார் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளதால் இதன் விலை இரு மடங்காக உயரும் என அச்சம் எழுந்துள்ளது. 

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் இயங்கி வருகின்றன. இதில் பெரும்பாலும் தனியார் தண்ணீர் டேங்கர் லாரிகள்தான். இவைகள் தான் அடுக்குமாடி குடியிருப்புக்கள் முழுவதும் ஜீவாதாரமாக கொண்டு இயங்கி வருகின்றன. . மேலும் தலைநகர் முழுவதும் உள்ள மருத்துவமனை, வணிக வளாகங்கள்,தியேட்டர்கள், நட்சத்திர ஓட்டல்கல் என பல்வேறு இடங்கள் முதற்கட்டமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பலர் தற்போது தான் இந்த பிரச்சனையை உணர்கின்றனர். இதே நிலை நீடித்தால் ஓரிரு நாளில் சென்னை முழுவதும் பெரும் சிரமம் ஏற்படும். எனவே அரசு உடனடியாக தலையிட்டு இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

இதனைதொடர்ந்து நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அரசு உடனடியாக தலையிட்டு இப்பிரச்னைக்கு  நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். மேலும் பொதுமக்கள் கவலை கொள்ள வேண்டாம் என கூறினார். இதனிடையே தர சான்று இல்லாத நிறுவனங்கள் சில இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தரமற்ற நீரை விநியோகிக்க வாய்ப்புள்ளதாகவும் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரத்து 552 கேன் குடிநீர் உற்பத்தி நிலையங்கள் இயங்கி வரும் நிலையில் அவற்றில் 70 சதவீத நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com