உரிய ஒப்புதல்களை பெறாத லாரிகளில் தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தென்சென்னை தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் , “சாகுபடிக்கு பயன்படுத்தப்படாத விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்துச்செல்லும் போது, ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் எடுத்துச்செல்வதாக கூறி அதிகாரிகள் துன்புறுத்துவதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும்” என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தண்ணீர் எடுக்கவும் கொண்டு செல்லவும் உரிய ஒப்புதல்களை பெற்ற லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனவும் மனுதாரரின் சங்க உறுப்பினர்கள் ஒப்புதல்களைப் பெற்றுள்ளனரா என்பதை தெரிவிக்காததால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அரசு தரப்பில் கோரப்பட்டது.
இதை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, மனுதாரரின் சங்க உறுப்பினர்கள் உரிய ஒப்புதல்களை பெற்றுள்ளனர் என முடிவுக்கு வர, எந்த அடிப்படையும் இல்லை எனக்சுட்டிக்காட்டினர். எனவே, உரிய ஒப்புதல் இன்றி தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்க முடியாதென மறுத்து, வழக்கை முடித்து வைத்தனர்.