சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் பல்லாவரத்தில் ஒரு கிணற்றில் எடுக்கப்படும் நீர் மக்களுக்கு குலுக்கல் முறையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
‘உங்க வீட்டுல தண்ணி வருதா?’, ‘நாங்க லாரில தான் தண்ணி வாங்குறோம்’. இப்படி எங்கு காணினும் தண்ணீரைப் பற்றிதான் சென்னைவாசிகள் பேசுகின்றனர். அந்த அளவுக்கு தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடும் நிலையில், சென்னை பல்லாவரம் ஈஸ்வரி நகர் புதுக்குடியிருப்பில் இருக்கும் கிணறு ஒன்று, இன்றும் 100 குடும்பங்களுக்கு நீராதாரமாக விளங்குகிறது.
ஆங்கிலேயர் காலத்தில் ரயில் நிலையம் அருகே, நீராவி என்ஜின்களுக்கு நீர் நிரப்புவதற்காக தோண்டப்பட்ட கிணறு பின்னாளில் கைவிடப்பட்டது. பின்னர் ஊர்மக்கள் கிணற்றை தூர்வாரி தங்கள் தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர். பிரச்னை ஏற்படாமல் இருக்க குலுக்கல் முறையில் குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு நீர் எடுக்க அனுமதிக்கப்படுகின்றன. காலை, மாலை என இருவேளைகளில் குடும்பத்துக்கு தலா 3 குடம் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.
கிணற்றில் இருந்து குடும்பத்துக்கு 3 குடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் லாரி மூலம் நீர் விநியோகம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். சென்னையே தண்ணீருக்காக அல்லாடும்போது இந்த பழைய ரயில்வே கிணறு சுமார் 100 குடும்பங்களுக்கு தண்ணீரை தந்து காத்து வருகிறது.