தண்ணீர் பஞ்சம்.. தாம்பரத்தில் பள்ளிக்கு விடுமுறை..!
சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தாம்பரத்தில் பள்ளி ஒன்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மேன்சன்கள், ஹோட்டல்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் தாம்பரத்தில் பள்ளி ஒன்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு தாம்பரத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் கிட்டத்தட்ட மூன்று ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நீர் பற்றாக்குறை காரணமாக 6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு நேற்றும் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையின் அனுமதி பெற்றே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறும்போது, “ தண்ணீர் பிரச்னை இங்கும் அதிகம் காணப்படுகிறது. எனவே அதிக விலை கொடுத்துதான் வாங்கி வருகிறோம். அத்துடன் கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்கும் வசதியும் இல்லை. அதனால் கீழ்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணி இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைந்து விடும். அதன்பின் வழக்கம்போல பள்ளிகள் செயல்படும்” என தெரிவித்துள்ளனர்.