காஞ்சிபுரத்தில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தனியார் பள்ளி ஒன்று, மாணவர்களுக்கு காலவரையற்ற அரைநாள் விடுமுறை விட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மேன்சன்கள், ஹோட்டல்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தண்ணீர் பற்றாக்குறையால் குரோம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்று, வரும் 24-ஆம் தேதி முதல் அரை நாள்தான் இயங்கும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் தண்ணீர் பஞ்சம் காஞ்சிபுரத்தையும் விட்டுவைக்கவில்லை. கடும் தண்ணீர் தட்டுபாடு காரணமாக காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்று மாணவர்களுக்கு காலவரையற்ற அரைநாள் விடுமுறை விட்டுள்ளது. Pre kg வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டுமே இந்த விடுமுறை பொருந்தும். அதேநேரத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்புகளுக்கு பள்ளி வேலை நேரத்தில் எந்த மாறுதலும் இல்லை என தெரிவித்துள்ளது. கழிவறையை பராமரிக்க போதிய தண்ணீர் வசதி இல்லாத காரணத்தினால் பள்ளி நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.