தமிழக 9 மாவட்டங்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை
தமிழகத்தில் காவிரி கரையோரம் உள்ள 9 மாவட்டங்களுக்கு மத்திய அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு நீர்வள ஆணையம் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாகவே மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கனமழை பெய்தபோது காவேரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து, தொடர் மழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி , கிருஷ்ணசாகர் அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அங்கிருந்து காவேரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட 1.40 லட்சம் கன அடி நீர் 2 நாட்களில் மேட்டூரை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பால் காவிரி கரையோரத்திலுள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை ஆகிய மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.