71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 68.50 அடியாக உயர்ந்ததை அடுத்து தற்போது இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 தென்மாவட்டங்களில் வைகை ஆற்று கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்த உடன் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் நீரை அப்படியே வெளியேற்றும் நடவடிக்கைகளில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர்.
அணை நீர்மட்டம் 68.50 அடியாக உள்ள நிலையில், தற்போது வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2753 கன அடியாக உள்ளது. வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 569 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 5421 மில்லியன் கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஆண்டிபட்டி வருஷநாடு மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதாலும் பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வைகை அணைக்கு வந்து கொண்டிருப்பதாலும் வைகை அணை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.