ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு; மாநகருக்குள் புகுந்த வெள்ளநீர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு; மாநகருக்குள் புகுந்த வெள்ளநீர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு; மாநகருக்குள் புகுந்த வெள்ளநீர்
Published on

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இரண்டாவது நாளாக நேற்று நள்ளிரவில் பெய்த கனமழை காரணமாக, மாவட்டத்திலுள்ள நீர் ஆதாரங்களில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இனியும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படியே மதுரை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்துவருகிறது. அதில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் நேற்று பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தின் குடியிருப்பு பகுதிகள் பலவற்றில் வெள்ள நீர் புகுந்து பாதிப்பும் ஏற்பட்டு வருகின்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மல்லி, கிருஷ்ணன்கோவில், செண்பகத்தோப்பு, வன்னியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரண்டாவது நாளாக கனமழை பெய்தது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த தொடர் கனமழையினால் மாவட்டத்தின் பெரிய கண்மாயான பெரியகுளம் கண்மாய் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் கண்மாயிலிருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது.

இந்தக் கண்மாய் மட்டுமன்றி, மாநகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மொட்டைபத்தான் கண்மாய், பொன்னாங்கன்னி கண்மாய், திருவண்ணாமலை குளம், செங்குளம் கண்மாய், வடமலைகுறிச்சி கண்மாய்கள் உள்ளிட்ட பலவும் நிரம்பி வருகின்றன. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை பகுதிகளான செண்பகத்தோப்பு, பேயானாற்று ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இப்படியான தொடர் நீர்வரத்து காரணமாக, மாவட்டத்தில் வெள்ளநீர் குடியிருப்புக்குள் நுழையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட கண்மாய்களில் பெரியகுளம் கண்மாயிலிருந்து உபரி நீர் அதிகமாக வெளியேற்றப்படுவதால் மம்சாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் வருவதற்கான பிரதான சாலையில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இவையன்றி திருமுக்குளம், பெரியகுளம் கண்மாய் பகுதிகளில் கரைகள் சேதம் அடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் அங்கு அதிகம் கூடுவதை தவிர்க்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதேபோல, ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மடவார் விளாகம் வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில், நேற்று வெள்ள நீர் புகுந்தது. சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்புத்துறையினர் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றி வந்தனர். தொடர்ந்து நீர்வரத்து வெளியேற்றும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழையில் ஸ்ரீவில்லிபுத்தூர் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com