வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் முக்கிய அணைகளில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நீர்மட்டம் எவ்வளவு இருக்கிறது என்ற விவரங்கள் கிடைத்துள்ளன.
டெல்டா மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு நீர்மட்டம் 99.88 அடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு நிரம்பி வழிகிறது. 5 மாவட்டங்களின் நீராதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரமான 152 அடியில், கடந்த ஆண்டில் நீர்மட்டம் 133.65 அடியாக இருந்தது. ஆனால், தற்போது நீர்மட்டத்தின் அளவு 126.60 அடியாகவே உள்ளது.
105 அடி உயரமுள்ள பவானி சாகர் அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டில் 101.53 அடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டும் அதே அளவிலேயே இருக்கிறது. 90 அடி உயரமுள்ள அமராவதி அணையில் கடந்த ஆண்டில் நீர்மட்டம் 83.44 அடி அளவிற்கு இருந்தது. ஆனால் அணையின் நீர்மட்டம் தற்போது 72.84 அடி மட்டுமே உள்ளது.
மதுரை மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டில் 69 அடியாக இருந்த நிலையில், தற்போது 62.80 அடியாக இருக்கிறது. 143 அடி உயரமுள்ள பாபநாசம் அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டில் 99.50 அடியாக இருந்தது. தற்போது நீர்மட்டம் 120.20 அடியாக இருக்கிறது.
மணிமுத்தாறு அணையின் மொத்த உயரம் 118 அடி. கடந்த ஆண்டின் இதே நாளில் இந்த அணையின் நீர்மட்டம் 86.05 அடியாக இருந்த நிலையில், தற்போது 54 அடியாக உள்ளது. சாத்தனூர் அணையின் மொத்த உயரமான 119 அடியில், கடந்த ஆண்டில் நீர்மட்டம் 96.05 அடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் 87.80 அடி மட்டுமே உள்ளது. 120 அடி உயரம் கொண்ட ஆழியாறு அணையில் கடந்த ஆண்டில் 113.10 அடியாக நீர்மட்டம் இருந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 116.50 அடியாக உள்ளது.