ஆடைகள்போல் துவைத்து மீண்டும் பயன்படுத்தும் வகையிலான நாப்கின்களை கோவையைச் சேர்ந்த இளம்பெண் தயாரித்து வருகிறார்.
கோவை கணபதி நகரைச் சேர்ந்த இளம்பெண் இஷானா. இவர் 12ஆம் வகுப்பு படித்த பின்னர் தையலில் டிப்ளோமா முடித்தார். தற்போது தையல் தொழிலில் இவர் ஈடுபட்டு வருகிறார். படிப்பை தொடர பெற்றோர் கூறியும், தொழில்முனைவோராக இருக்க விரும்பி தையல் தொழில் செய்து வருகிறார். அத்துடன் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் பிரச்னையாக உள்ள சானிடரி பேட்களுக்கு மாற்றாக ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என்ற முனைப்பிலும் இருந்துள்ளார்.
இந்நிலையில் தான் நினைத்ததுபோலவே சானிடரி பேட்களுக்கு பதிலாக மக்கும் பருத்தி துணிகளாலான நாப்கினை தயாரித்து பெண்களின் வரவேற்பை பெற்று வருகிறார். சந்தையில் விற்கப்படும் நாப்கின்களால் தனக்கு ஏற்பட்ட உடல் பிரச்னைக்கு தீர்வு எட்டவே, இந்த புது முயற்சியை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக்கிற்கு மாற்றை நோக்கி மக்கள் பயணிக்கும் சூழலில், இதுபோன்ற இயற்கைக்கு உகந்த நாப்கினை பயன்படுத்தவும் பெண்கள் முன்வர வேண்டும் என்று இஷானா கோரிக்கை விடுத்துள்ளார். இவர் கண்டுபிடித்துள்ள நாப்கின்களை ஆடைகள் போன்று துவைத்து மீண்டும் பயன்படுத்த முடியும் எனக் கூறுகிறார்.
இதை பயன்படுத்தி வரும் பெண்கள் கூறும்போது, ஜெல், பசை போன்ற ரசாயனம் கலந்த சானிட்டரி நாப்கின்கள் பலருக்கு அலர்ஜி ஏற்படுத்துவதுடன், சுற்றுச்சூழலுக்கு சவாலாக இருந்து வருவதாக கூறுகின்றனர். ஆனால் முழுவதும் துணிகளால் தயாரிக்கப்படும் பருத்தி நாப்கின்கள் மக்கும் தன்மை கொண்டதால் மண்ணுக்கும், சுற்றுச்சூழலுக்கு உகந்தைவையாக இருக்கிறது என்கின்றனர். ஆரம்பத்தில் பருத்தி நாப்கினுக்கு மாறுவதில் சில சங்கடங்கள் இருந்தாலும், பிறகு மிகவும் எளிதாகவும், வசதியாகவும் இருப்பதாக கூறுகின்றனர்.