மதுரையில் இளைஞர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், தன்னுடைய மகன் காதல் செய்ததால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். இதில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோவிலங்குளம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் 23 வயதான அழகேந்திரன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதான பெண்ணை காதலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்தான், பெண்ணின் உறவினரான பிரபாகரன் என்பவர் அழகேந்திரனை கடந்த திங்கள் கிழமை தனியாக இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றார். அப்போது காதலிக்கக்கூடாது என மிரட்டி கொலை செய்ததாகவும், இந்த விவகாரத்தில் மகன் காதல் ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க காத்திருந்தனர்.
அப்போது அழகேந்திரனின் தாய் புதிய தலைமுறையிடம் கூறுகையில், “என் மகன் காதலித்ததால் தான் அவரை கொலை செய்துள்ளனர். மகன் இப்படி செய்கிறார் என எங்களிடம் கூட சொல்லவில்லை. அவர்கள்தான் என் மகனை அழைத்து சென்று கொலை செய்துள்ளனர்.
என் மகனும் அவன் காதலித்ததைப் பற்றி எங்களிடம் சொல்லவில்லை. ஆனால் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. என் மகன் அக்கா வீட்டிற்கு சென்றபோது, பிரபாகரன் என்பவர் என் மகனை அழைத்து சென்று மிரட்டி கொலை செய்துள்ளனர். காவல்துறையிடம் புகாரளித்தால், அவர்களோ, ‘கள்ளிக்குடியில் தானே காணமல் போனார். அங்கு புகாரளியுங்கள். அங்கு புகாரளித்துவிட்டு இங்கு வாருங்கள் என சொன்னார்கள். நாங்கள் அப்போதே அங்கிருந்து கிளம்பி இரவு 2 மணிக்கு கள்ளிக்குடி வந்தோம். இப்போது வந்துள்ளீர்கள் என கூறி பெயர்களை எல்லாம் வாங்கிங்கொண்டு காலையில் 10 மணிக்கு வந்து புகார் அளிங்கள் என்று சொன்னார்கள்.
காலையில் எங்கள் ஊராட்சித் தலைவர் வந்து, உன் மகனை கொன்றுவிட்டார்கள். சத்திரப்பட்டி கம்மாய்க்குள் உடல் இருக்கிறதாம். நான் ஒரு போலீஸ் நம்பர் தருகிறேன் என்றார். அங்கு சென்று பார்த்தோம். அவர்களோ உடலை மதுரைக்கு அனுப்பிவிட்டோம் என்றார்கள். நாங்கள் மதுரைக்கும் வந்துவிட்டோம். இன்னும் என் மகனைக் காட்டவில்லை” என்றார்.
அழகேந்திரன் தந்தை இதுகுறித்து கூறுகையில், “என் மகன் வேலைக்கு சென்றிருந்தார். வீட்டிற்கு நெடுநேரமாகியும் வரவில்லை. நாங்களும் உறவினர் வீடுகளில் எல்லாம் தேடிப்பார்த்தோம். காவல்துறையிலும் சென்று புகாரளித்தோம்” என்றார்.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கையை காவல்துறை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது. இதுதொடர்பாக காவல்துறையிடம் கேட்டபோது, தற்போது வரை விசாரணை நடைபெற்று வருகிறது என்பதை தெரிவித்தனர்.