பாதிக்கப்பட்ட பாண்டியன்
பாதிக்கப்பட்ட பாண்டியன்pt web

”தலைகீழாக கட்டிப்போட்டு ஆசிட் ஊற்றியது போலீஸ்”-சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் புதுக்கோட்டை இளைஞர்!

புதுக்கோட்டையில் 18 வயது இளைஞர் ஒருவர் உடலில் பலத்த காயங்களுடன் சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். காவல்துறையினர் தன்னை தாக்கியதே இந்த நிலைக்கு காரணம் என்றும் குற்றம் சாட்டுகிறார்.
Published on

சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை

புதுக்கோட்டையில் 18 வயது இளைஞர் ஒருவர் உடலில் பலத்த காயங்களுடன் சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். காவல்துறையினர் தலைகீழாக கட்டிப்போட்டு கடுமையாக தாக்கியதே தனது நிலைக்கு காரணம் என்று இவர் கூறும் நிலையில் காவல்துறையினர் இதனை மறுக்கிறார்கள். என்ன நடந்தது? பார்க்கலாம்.

மணமேல்குடி அருகே விச்சூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் கடந்த ஒரு வார காலமாக சிகிச்சை பெற்று வருகிறார். 18 வயதாகும் இவர் சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில், கை, கால், இடுப்புப் பகுதிகளில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகிறார். தனது காயங்களுக்கு காரணமாக இவர் சுட்டுவது காவல்துறையை... கடந்த ஜூன் 9 ஆம்தேதி நடந்த நகைப்பறிப்பு சம்பவத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு கூறி காவல்துறையினர் தன்னை அழைத்துச்சென்று தாக்கியதாக பாண்டியன் கூறுகிறார்.

பாதிக்கப்பட்ட பாண்டியன்
2 மணி நேரத்திற்கு மேல் பிரதமர் மோடி உரை.. முழக்கம் எழுப்பிய எதிர்க்கட்சிகள்! கண்டித்த சபாநாயகர்!

ஆசிட் ஊற்றி அடித்த காவல்துறை?

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பாண்டியன், “7 மணிக்கு என்னைப் பிடித்தார்கள். காவல்நிலையத்திற்கு எல்லாம் அழைத்துச் செல்லவில்லை. நேராக, காவல்நிலையத்திற்கு எதிரேயுள்ள குடோனுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு உடைகளை எல்லாம் களையச் சொல்லி, தொங்கவிட்டு ஆசிட்டை ஊற்றினார்கள். அதோடு 5 பேர் சுற்றி நின்று அடித்தார்கள். தண்ணீர் கேட்டேன் கொடுக்கவில்லை. என் கழுத்தில் தண்ணீர் பாட்டிலைக் கட்டி முடிந்தால் குடித்துக்கொள் என சொல்லிவிட்டு சென்றுவிட்டனர்.

4 மணி நேரம் கழித்து மீண்டும் வந்து, இறக்கிவிட்டு ரெண்டு கைகளையும், கால்களையும் கட்டி தலைகீழாக தொங்கவிட்டு மீண்டும் அடித்தார்கள். அப்படியேவிட்டுவிட்டு சாப்பிட சென்று விட்டார்கள். மீண்டும் 7 மணிக்கு மீண்டும் வந்தார்கள். இறக்கிவிட்டு படுக்கவைத்துவிட்டார்கள். முன்னாள் இருவர் கால்களை தூக்கிப் பிடித்துக்கொள்ள மீண்டும் அடித்தார்கள். சுவற்றில் சாயவைத்து கால்களை தலைகீழாக விரித்து அதில் இந்தப்பக்கம், அந்தப்பக்கம் தலா இருவர் ஏறி நின்று கொண்டார்கள். அத்துடன் கால் விரிந்துவிட்டது. மூன்று நாள் வைத்து அடித்தார்கள்” என தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பாண்டியன்
8,300 கோடி ஊழல்! இந்திய-அமெரிக்க தொழிலதிபருக்கு 7.5 ஆண்டுகள் சிறை; USAவை உலுக்கிய வழக்கில் தீர்ப்பு!

 தாயையும் தாக்கிய காவல்துறை

திருட்டுக் குற்றத்தை ஒப்புக் கொள்ளக் கூறி முதல் மூன்று நாட்கள் மணமேல்குடியிலும் அடுத்த மூன்று நாட்கள் ஆலங்குடியிலும் வைத்து கடுமையாக கட்டிப்போட்டு அடித்ததாக பாண்டியன் தெரிவிக்கிறார். ஒருவாரம் ஆகியும் மகன் வீடு திரும்பாததால், வழக்கறிஞர் மூலம் தாய் காளியம்மாள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு போட்டதையடுத்து, ஜூன் 18 ஆம்தேதி கஞ்சா வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும், உடலில் உள்ள காயங்களால் சிறையில் அடைக்காமல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் பாண்டியன் கூறுகிறார். தன்னை மட்டுமின்றி தனது தாயையும், தந்தையும் காவல்துறையினர் தாக்கியதாக பாண்டியன் தெரிவிக்கிறார்.

இதுதொடர்பாக தாய் காளியம்மாள் கூறுகையில், “ஒரு ஆண் காவலரும், ஒரு பெண் காவலரும் வந்தார்கள். வந்த உடன் அறைந்து, ‘உன்னிடம் தான் கொடுத்துள்ளான் கொடு’ என கேட்டார்கள். என்னிடம் கொடுக்கவில்லை. அவன் அந்த மாதிரியான பையன் கிடையாது, நீங்கள் அடித்ததால் அப்படி சொல்லி இருப்பான். அவனை அடிக்காதீர்கள் என்றேன். அவர்கள் எதையும் கேட்கவில்லை. மாலை 6 மணி முதல் காலை 5 மணி வரை அந்த பெண் என்னை அடித்தார். என்னையும் அடித்தார். என் சின்ன பையனையும் அடித்து கைகளை எல்லாம் முறுக்கினார். என்னைக் காப்பாத்து காப்பாத்து என்றான். அவனைக் காப்பாற்ற முடியவில்லை” என்கிறார் கண்ணீர் மல்க...

பாதிக்கப்பட்ட பாண்டியன்
அதானி விவகாரம்| செபி அனுப்பிய நோட்டீஸ்.. புதிய நிறுவனத்தை இழுத்துவிட்ட ஹிண்டன்பர்க்!

”ஆசிட் ஊற்றியதால் காயங்கள் அதிகமாக இருக்கிறது” - தந்தை

தந்தை ரவி கூறுகையில், “ஆசிட் ஊற்றியதால் காயங்கள் அதிகமாக இருக்கிறது. ஆசிட் ஊற்றியதால் ரெண்டு சிறுநீரகமும் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அதை சரிசெய்வதற்கு சென்னைக்கோ அல்லது மதுரைக்கோ கொண்டு சென்று பார்க்க வேண்டும் என்கின்றனர். எங்கு என்று நீங்கள் ஆலோசனை செய்து சொல்லுங்கள்.. நாங்கள் எழுதித் தருகிறோம் என்கிறார்கள். அந்த அளவிற்கு பாதிப்பு இருக்கிறது” என தெரிவித்தார்.

தம்பிகளை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தனது படிப்பை பிளஸ் ஒன் உடன் நிறுத்திவிட்டு கூலிவேலைக்குச் சென்றுவந்த நிலையில், இப்போது காவல்துறையினரின் சித்ரவதையால் உயிருக்கே போராடிக்கொண்டிருப்பதாக கண்ணீர் வடிக்கிறார்கள் பாண்டியனின் பெற்றோர்.

இவர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து மணமேல்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கௌதமிடம் கேட்டபோது கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் கஞ்சா கொண்டு சென்ற காரணத்தினால் பாண்டியன் கைது செய்யப்பட்டார் என்றும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறைக்கு நீதிபதியின் உத்தரவின் பெயரில் அனுப்பி வைத்ததாகவும், பாண்டியனின் உடலில் உள்ள காயங்கள் மாட்டுவண்டி பந்தயத்தில் ஏற்பட்ட காயம் என்றும் தெரிவித்தார்.

இப்போது பாண்டியனும், குடும்பத்தாரும் எதற்காகவோ மாற்றி பேசுவதாகவும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தெரிவிக்கிறார். நடந்தது என்ன? பாண்டியனின் நிலைக்கு காரணம் யார்? காவல்துறையின் சித்ரவதைதான் காரணமா? சித்ரவதை உண்மையெனில் சம்பந்தப்பட்ட காவலர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்களா?

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com