மடியில் கனமில்லை வழியில் பயமில்லை பொய்க் குற்றச்சாட்டை சட்டரீதியாக சந்திக்க தயாராக உள்ளேன் என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசும்போது...
வக்பு வாரியத்திற்குச் சொந்தமான சொத்துக்களை நான் அபகரித்து இருப்பதாக ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு விளக்கம் அளிக்க வேண்டியது எனது கடமை. இதில் நான் நீண்டகாலமாக பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்தேன். சாதாரண நிலையில் இருந்த நான் படிப்படியாக முன்னேறி வந்துள்ளதாக பேட்டி அளித்துள்ளனர். உண்மைதான் இதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
ஆனால், வக்பு வாரிய சொத்து அபகரிப்பு என்பது பொய்யான குற்றச்சாட்டு. என் மனைவி பெயர் சைதானிபீ, சைதானிபீ டிரஸ்ட் என்பது கிருஷ்ணாபுரத்தில் உள்ள பள்ளி வாசலின் பெயர். அந்த வம்சாவழியில் வந்த எனது மனைவி பெயர் சைதானிபீ என்பதால் என் மனைவி தான் சொத்துக்களை அனுபவித்து வருகிறார் என தவறாக கருதி பேட்டி அளித்துள்ளனர்.
மேலும் இந்த சொத்தில் எனது மனைவியோ எனது மனைவியின் உடன் பிறந்த சகோதரர்களோ எவ்விதமான பட்டாவும் வாங்கவில்லை, அவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. பள்ளி வாசலையொட்டி இருக்கின்ற கிருஷ்ணாபுரம் கிராம நத்தத்தில்தான் குடிசை போட்டு வாழ்கின்றனர். எனது மனைவி பெயர் சைதானிபீ என்பதால் அந்த சொத்து முழுவதும் எங்களிடம் உள்ளதாக ஒரு மாயையை உருவாக்குகிறார்கள்.
பேருந்து நிலையம் அருகில் ஒரு சைக்கிள் நிறுத்தம் எனது மனைவி பெயரில் உள்ளது. ஆனால் இந்த சொத்து ஒரு தனி நபரின் சொத்து ஆகும். அப்துல்காதர் என்பவரிடம் கிரையம் வாங்கி சைக்கிள் நிறுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது பயணிகளின் நன்மைக்காகத்தானே தவிர வருவாயை ஈட்டுவதற்காக அல்ல.
கிருஷ்ணாபுரம் ஜன்னிபி டிரஸ்ட் 1972-ல் எனது தகப்பனார் அடமானமாகவும், குத்தகையாகவும் எனது முன்னோர்கள் விவசாய நிலமாக அனுபவித்து வருகின்றனர். அப்போது கிரையம் பெற்று வாங்கிய விவசாய நிலம் என்பதால் எனது சகோதரர்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறேன். இதற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
மேலும் எனது தங்கை கணவர் செங்கல் சூளை போட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். இந்த இடம் புறம்போக்கு இடம் அரசுக்கு கட்டணம் செலுத்திதான் செங்கல் சூளை போட்டுள்ளனர். இது தற்காலிகம்தான் இது அபகரிப்பு அல்ல. இதற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பல்வேறு தரப்பினரும் இங்கு செங்கள் சூளை போட்டுள்ளனனர்.
இவை அனைத்தையும் ஜோடனை செய்து ஒரு மாயையை உருவாக்கி நான் அபகரித்தாக பொய் புகார் கூறியுள்ளனர். நான் அதிகாரத்தை பயன்படுத்தவில்லை. கிருஷ்ணாபுரத்தில் உள்ள மலைவாழ் மக்களுக்கு எனது சொந்த நிலத்தை 66 சென்டை வீடுகட்ட வழங்கியுள்ளேன். எனது சொத்து மதிப்பு என்ன என்பதை சட்டமன்ற தேர்தலில் தெரியபடுத்தியுள்ளேன்.
நான் இது போன்று சொத்துக்களை அபகரித்தால் என்னை 1986 முதல் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவராக 5 முறையும் தொடர்ந்து எம்எல்ஏவாக 2 முறையும் மக்கள் தேர்ந்தெடுத்திருப்பார்களா.
எனக்கு எதிராக பேட்டி கொடுத்தவர் முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர்அலி எனது வளர்ச்சியை கண்டு காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த பேட்டியை அளித்துள்ளார். அவர் அளித்துள்ளது உண்மைக்கு மாறான செய்தியாகும். தொடர்ந்து என் மீது இது போன்ற பொய்யான செய்திகளை கூறுவதை அவர்கள் நிறுத்த வேண்டும். இல்லை என்று சொன்னால் சட்ட ரீதியாக அவர்களை சந்திக்க நான் என்றும் தயாராக உள்ளேன் என்றார்.