கட்சியின் பெயர், சின்னம் குறித்து தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும்வரை காத்திருங்கள் என்று ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி மக்கள் மன்றத்தினுடைய கட்சியின் பெயர், சின்னம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிவருகிறது. ஆனால் தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும்வரை காத்திருங்கள் என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி அதில் இடம் பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும்வரை நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்கள் காத்திருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, ‘மக்கள் சேவைக் கட்சி’ என்ற கட்சிக்கு தேர்தல் ஆணையத்தில் ‘ஆட்டோ ரிக்ஷா’ சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. மக்கள் சேவை கட்சியின் விண்ணப்பத்தில் ரஜினிகாந்தின் பெயர் இடம்பெற்றிருந்ததால் அவர்தான் இந்தக் கட்சியை திட்டமிட்டு பதிவு செய்திருப்பதாகவும், ஜனவரி மாதம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.