பொதுத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு எனும் இலக்கை எட்ட, தேர்தல் ஆணையம் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதற்காக சுவரொட்டிகள், விளம்பரங்களை வாக்காளர்களிடம் கொண்டு செல்லும் தேர்தல் ஆணையம், யாருக்குமே வாக்களிக்க விரும்பாதவர்களும், ஓட்டு போட வேண்டும் என்பதற்காக 2013ஆம் ஆண்டு நோட்டா முறையை அறிமுகப்படுத்தியது.
இவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டாலும் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப்பதிவு என்பது 75 சதவீதத்தை கூட எட்டுவதில்லை. குறிப்பாக படித்த மக்கள் அதிகம் வாழும் மாநகரப்பகுதிகளில் வாக்கு சதவீதம் என்பது குறைவாகவே பதிவாகிறது. அதிலும் சென்னை மாநகரில் மூன்று மக்களவைத் தொகுதிகளிலும் 2009, 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு தேர்தலில் ஒருமுறை கூட 70 சதவீத வாக்குகளை எட்டவில்லை.
இதேபோல் 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் சென்னையில் உள்ள 16 தொகுதிகளை சேர்த்து 59.06 விழுக்காடு வாக்குகளே பதிவாகின. அதிகபட்சமாக கரூரில் 83.92% வாக்குகள் பதிவானது.
சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் தொடர்ந்து குறைவான வாக்குகளே பதிவாகும் நிலையில், குழு மனப்பான்மை, அரசியல்வாதிகளுடன் நேரடி தொடர்பு, கள அரசியல் தன்மை, அரசியல் ஆர்வம் போன்றவையே கிராம மக்கள் அதிகமாக வாக்களிப்பதற்கு காரணம் என்று மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.
அதே சமயம், வரி, விலைவாசி உயர்வு, வேலையின்மை, குடிநீர் பிரச்னைகளால் நகரவாசிகளே நேரடியாகவும், விரைவாகவும் பாதிக்கப்படுவதாகவும், இதன் காரணமாக வாக்களிப்பதில் அவர்களுக்கு அலட்சியம் ஏற்படுகிறது என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நகர்ப்புறத்தில் சாமனியர்கள் வாழும் பகுதியில் வாக்கு சதவீதம் அதிகரிப்பதாகவும், செல்வந்தர்கள் வசிக்கும் இடங்களில் குறைவான வாக்குகளே பதிவாவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.