விழுப்புரத்தில் ஜெயஸ்ரீ என்ற 10ஆம் வகுப்பு மாணவியை கொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தின் சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ என்பவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சீமான் வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியில், “விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி தங்கை ஜெயஸ்ரீ, குடும்ப முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் பங்கேற்கிறேன்.
பெரியவர்களுக்குள் இருக்கும் குடும்பப்பகைக்குக் குழந்தையை எரித்துக் கொல்வதெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாத கொடூரமான செயல். இதற்குக் காரணமானவர்களுக்கு எவ்வித பாகுபாடும் இன்றி விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடுமையான சட்டங்களால் மட்டுமே நிறுத்தப்படும் என்பதை உணர்ந்து அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்!” என தெரிவித்துள்ளார்.