விருதுநகரில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டடம் பயன்பாட்டிற்கு முன்பே சேதமடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கம்பாளி கிராமம். இக்கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு போதிய இட வசதி இல்லாததால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுதொடர்பாக கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் புதிய கட்டிடம் கட்டித்தர அரசுக்கு பலமுறை தொடர்ந்து கோரிக்கை வைத்து வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில் அரசு சார்பில் தற்போது பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
கட்டிடப் பணிகள் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டு, தற்போதுதான் பணிகள் முடிக்கப்பட்டது. 2 மாதங்களுக்கு முன் இதன் திறப்புவிழா நடைபெற்றும், மாணவர்கள் பயன்பாட்டிற்கு வராமலே உள்ளது. இந்நிலையில் கட்டடத்தின் அஸ்த்திவாரம் மற்றும் சுற்றுச்சுவர்கள் ஆங்காங்கே பெயர்ந்துள்ளது. முறையான அளவு சிமெண்ட் பூச்சுக்கள் இல்லாததால் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்துள்ளது. தரமற்ற நிலையில் கட்டியதால் பயன்பாட்டிற்கு வரும் முன்பே சிதலமடைந்து வருகிறது.
மேலும் கட்டடம் கண்மாய் கரையை ஒட்டி உள்ளதாலும், கட்டடத்தின் அஸ்திவாரம் மோசமாக உள்ளதாலும் மழைகாலங்களில் பெரும் விபத்து நடைபெற வாய்ப்பு உள்ளதாக மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, பள்ளிக்கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் தரமான கட்டடம் அமைத்து, அதன் தரத்தை உறுதி செய்த பின்பு மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.