விருதுநகர் அருகே தீக்குச்சி மத்தாப்பு தயாரிக்கும் ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் படுகாயமடைந்தனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருமூர்த்திபட்டியில், வாசுதேவன் என்பவருக்கு சொந்தமான துர்கா பட்டாசு ஆலையில் 50 க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ரசாயன மூலப் பொருட்கள் உராய்வின் காரணமாக, ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதில், ஒரு பெண் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மாவட்ட வருவாய் அலுவலர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலர் மங்கல ராமசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புது ராஜா என்ற பட்டாசு தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிகிச்சை பெற்று வரும் மூன்று பேரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் 5 ஆவது முறையாக பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர்.