விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு 34 வேட்பாளர்கள் 41 வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் அந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் ராதிகா சரத்குமார், விஜயபிரபாகரன் உள்ளிட்ட 27 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கரும்புச் சின்னத்தை பெற்ற பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி வேட்பாளர் மற்றும் அவருக்கு ஆதரவாக யாரும் வேட்பு மனு பரிசீலணையில் கலந்து கொள்ளாத நிலையில் கூட அவருடைய வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. 14 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில் வேட்பாளர்களது சொத்துமதிப்பு விவரங்களும் வெளிவருகின்றன. பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை ராதிகா, தனது வேட்புமனுவில் 83 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார். இதில் அசையும் சொத்து மதிப்பு சுமார் 27 கோடி ரூபாய் உள்ளதாகவும், அசையா சொத்து மதிப்பு 24 கோடி ரூபாய் அளவில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், 55 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அசையும், அசையா சொத்துகளையும், கடன் விவரங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளரும், எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர், தனது வேட்புமனுவில் 3 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார்.