ராஜபாளையத்தில் 300 கர்ப்பிணி பெண்களுக்கு அரசு சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில், தென்காசி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் தனுஷ் எம்.குமார், எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன், வட்டாட்சியர் ராமச்சந்திரன், டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட 300 கர்ப்பிணி பெண்களுக்கு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தங்கலட்சுமி கர்ப்ப காலத்தில் பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள், காய்கறிகள், சிறு தானியங்கள், மருந்துகள் குறித்தும், தவிர்க்க வேண்டியவைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். இதனை தொடர்ந்து காய்கறி மற்றும் சத்துணவு குறித்த கண்காட்சி நடைபெற்றது.
அடுத்ததாக நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில், கலந்து கொண்ட கர்ப்பிணிகள் அனைவருக்கும் மாலை அணிவித்து, சந்தனமிட்டு, கண்ணாடி வளையல் அணிவிக்கப்பட்டது. பின்னர் சேலை, தாம்பூலம், பழங்கள், மஞ்சள் கயிறு, குழந்தைகள் நலன் குறித்த புத்தகம் அடங்கிய தொகுப்பு அனைவருக்கும் சீதனமாக வழங்கப்பட்டது. இதையடுத்து இனிப்பு உள்ளிட்ட 7 வகையான மதிய உணவு வழங்கப்பட்டது.