விருத்தாச்சலம் வாக்கு எண்ணும் மையம் அருகே நின்ற கண்டெய்னர் லாரியால் பரபரப்பு. லாரியை திறக்கக்கோரி விருத்தாச்சலம் காங்கிரஸ் வேட்பாளர், திட்டக்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விருத்தாச்சலம் திட்டக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் விருத்தாசலம் அரசு கொலஞ்சியப்பர் கலைக் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று வாக்கு எண்ணும் மையம் அருகே 500 மீட்டர் தொலைவில் ஒரு கண்டெய்னர் லாரி நின்றிருந்தது. இது மர்மமான லாரி, இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அங்கிருந்த லாரி கொண்டு செல்லப்பட்டு புதுக்குப்பம் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று காலை விருத்தாச்சலம் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் திட்டக்குடி சட்டப்பேரவை உறுப்பினரும் திட்டக்குடி திமுக வேட்பாளருமான கணேசன் தலைமையில் அந்த லாரியை சிறைபிடித்தனர். இதையடுத்து அநத் லாரியில் மர்மம் இருப்பதாகவும், லாரியை திறந்து சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அந்த கண்டெய்னர் லாரி பொள்ளாச்சியிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு செல்வதாகவும் அந்த லாரியில் தேங்காய் நார்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய கொண்டு செல்லப்படுவதாகவும் ஓட்டுனர் தெரிவித்தார்.
இதை அமலாக்கத்துறை ஆய்வு செய்து சீல் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே நேரடியாக இதை திறந்து பார்க்க முடியாது அமலாக்கத் துறைக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டு அந்த அதிகாரிகள் வந்தால் மட்டுமே திறக்க முடியும் என விருத்தாச்சலம் சார் ஆட்சியர் தெரிவித்தார். ஆனால் வேட்பாளர்கள் அதை ஏற்க மறுத்ததால் அந்த லாரி தற்போது போலீஸ் பாதுகாப்புடன் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் விருத்தாச்சலம் பரபரப்பாக காணப்படுகிறது.