திருவள்ளூரில் உள்ள திரையரங்கம் ஒன்றில் ஊழியர்களை அடியாட்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
திருவள்ளூர் தேரடி பகுதியில் உள்ள ராக்கி திரையரங்கில் நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் திரையிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மது அருந்தி விட்டு வருபவர்களுக்கு திரையரங்கில் டிக்கெட்டுகள் கொடுப்பதில்லை என்பது வழக்கமாக உள்ள நிலையில், நேற்று மதியம் படம் தொடங்கி இடைவேளை விடும் தருணத்தில் வள்ளுவர் புரத்தைச் சேர்ந்த கோகுல் கொடியரசு என்பவரும் சுகன் என்பவரும் டிக்கெட் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் படம் இடைவேளை விடப்படுகிறது அதனால் டிக்கெட் இல்லை என்றும் மது அருந்தியுள்ளதால் டிக்கெட் தர ஊழியர்கள் மறுத்துள்ளதாக திரையரங்க நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்து சென்ற இருவரும் சிறிது நேரத்தில் 10 பேர் கொன்ட அடியாட்களுடன் திரையரங்கிற்கு வந்து திரையரங்கில் பணிபுரியும் விக்னேஷ் என்பவரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதையடுத்து திரையரங்கு மேலாளர் அரசு, இந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திரையரங்கில் புகுந்து சட்டையை கழற்றிவிட்டு ஊழியர்களை தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.