கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த கோணனூர் கிராமத்தில் சாலையின் குறுக்கே மலைப்பாம்பு ஒன்று சாலையை கடந்து சென்றுள்ளது. அப்பொழுது அப்பகுதியை கடந்து சென்ற பெண்கள், கத்தி கூச்சலிட்டு அலறியுள்ளனர்.
இதற்கிடையே, நிகழ்விடத்திற்கு மதுபோதையில் வந்த அதே கிராமத்தை சேர்ந்த இளவரசன் என்பவர், கொஞ்சமும் பயமில்லாமல் மலைப்பாம்பை பிடித்து தனது தோள் மீது போட்டு, பாம்புடன் கொஞ்சி விளையாடத் தொடங்கினார்.
ஆடுக்கறியை கூறு போட்டு விற்பதுபோல, மலைப்பாம்பை பிடித்து தோளில் போட்டுக்கொண்டு, கிலோ 700 ரூபாய் மட்டுமே என கூவத் தொடங்கினார் அந்த இளைஞர். இளைஞரின் வேடிக்கைக்கு இடையே, அங்கிருந்தவர்கள் போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கூறினர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பை மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மதுபோதையில் மலைப்பாம்பை தோளில் போட்டுக்கொண்டு இளைஞர் ஒருபக்கம் வேடிக்கை காட்டினார் என்றால், அவரை சுற்றி இருந்தவர்கள் ஆபத்தை உணராமல் மதுபோதை ஆசாமியை உற்சாகப்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட நேரமாக பாம்பை பிடித்துக்கொண்டு போக்கு காட்டிய நபரின் காலில், கடைசி நேரத்தில் பாம்பு சுற்றிக்கொண்டது. அதுவரை அசால்ட்டாக இருந்தவர், கடிக்க வருது பிடிப்பா என்று அலறினார். பாம்பு மீட்கப்பட்டுவிட்ட நிலையில், சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.