ஸ்மார்ட்போன் உலகில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான புகைப்படங்கள் வைரலாகின்றன. ஒருநாள் சிறுவனின் மழலை பேச்சு வைரலானால், மறுநாளே பணமில்லாமல் படிக்க தவிக்கும் மாணவி என்ற செய்தி வைரலாகிறது. பொழுதுபோக்கு என்பதை காட்டிலும் இந்த வைரல் புகைப்படங்களால் சில சமயம் இல்லாதவர்களுக்கு உதவுக் கரமும் நீளுகின்றன. நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் தான் முன்பெல்லாம் வைரலாகிக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது நிலைமை அப்படியல்ல. எளிய விஷயங்களை கூட மக்கள் கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள். அழகும், உண்மையும் எங்கிருக்கோ அங்கேயே ரசிக்கிறார்கள். அதற்கு உதாரணம், சமீபத்தில் ஒருசிறுவன் ஸ்மார்ட்போன் போல கையில் காலனியை வைத்துக்கொண்டு நிற்க, அந்த கற்பனை போனுக்கு ஒரு நான்கு குழந்தைகள் போஸ் கொடுத்த காட்சி இணையத்தை வைரலாக்கி கலக்கியது.
இந்நிலையில் தற்போது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில், ‘கிளையை ஒடிக்காமல் திருடவும்’ என மரத்தின் மீது எழுதி தொங்கவிடப்பட்டுள்ளது. பொதுவாக நாம் சாலையோரமோ, அல்லது வீடு அருகேயோ நடந்து செல்லும்போது வீட்டுக்குள் நின்று வெளியே பார்த்து புன்னகைக்கும் பூக்களை பறிப்பதை சிலர் வழக்கமாக வைத்து இருப்பார்கள்.
அப்படித்தான் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர் ஒருவர் இந்த புகைப்படத்தை தன் வீட்டு மரத்தின் மீது தொங்கவிட்டுள்ளார். அதாவது தன் வீட்டில் இருக்கும் முருங்கை மரத்தில் தொங்கும் முருங்கை காயை அவ்வழியாக செல்லும் ஒருசிலர் பறிப்பதை உணர்ந்த வீட்டின் உரிமையாளர், கிளையை முறிக்காமல் திருடவும் என வெள்ளைத் தாளில் எழுதி அந்த அட்டையை தொங்கவிட்டுள்ளார். அத்துடன் 2 காய் மட்டும் திருடவும் என்ற மற்றொரு அட்டையையும் அதில் வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.