"இது ஒவ்வொருவருக்கும் தலைகுனிவு; மாணவியின் மருத்துவக் கல்வி கனவை நனவாகிட வேண்டும்" – திருமாவளவன்

மாணவி ரேகாவுக்கு எதிரான வன்கொடுமை, மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் தலை குனிவை ஏற்படுத்துகிறது! சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் கொடுமைகளைத் தடுத்திட அரசு ஆணையம் அமைக்க வேண்டும் என்று விசிக அறிக்கை வெளியிட்டுள்ளது.
திருமாவளவன்
திருமாவளவன்WebTeam
Published on

சென்னை பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆன்டோவும், அவரது மனைவி மெர்லின் என்பவரும் தனது வீட்டில் வேலை செய்த பட்டியலின பெண்ணை கொடுமை படுத்தியதாக வீட்டு வேலை செய்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், வீட்டு வேலை செய்த பெண்ணை கொடுமைப்படுத்திய ஆன்டோ மற்றும் மெர்லின் ஆகியோரை கண்டித்து விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்....

Anto  merlin
Anto merlinpt desk

”கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள திருநருங்குன்றம் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிட சமூக பள்ளி மாணவி ரேகாவுக்கு நேர்ந்துள்ள வன்கொடுமைகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. 12ஆம் வகுப்பை முடித்துள்ள மாணவி ரேகா நீட் தேர்வெழுதி மருத்துவம் பயிலும் கனவில் இருந்துள்ளார். அதற்காக அவர் வீட்டு வேலை செய்ய முடிவெடுத்து, திருவான்மியூர் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் முகவர் ஒருவர் மூலம் வீட்டுப் பணியாளராக சேர்ந்துள்ளார்.

வீட்டு உரிமையாளர் அன்டோ மதிவாணன் என்பவர் பல்லாவரம் தொகுதியைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் ஆவார். அவரது மனைவி மெர்லின் என்பவர் தான், மாணவி ரேகாவை குரூரமாகக் கொடுமைப் படுத்தியுள்ளார் எனத் தெரியவருகிறது. வீட்டு வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்தே பல மாதங்களாகச் ரேகாவுக்கு சம்பளம் வழங்காமலும், அவரது குடும்பத்தினரைச் சந்திக்கவிடாமலும், ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை வாங்கியதுடன், மனிதாபிமானமற்ற முறையில் அடித்துத் துன்புறுத்திக் கொடூரமாக வதைத்துள்ளாரென்று தெரியவருகிறது.

Anto  merlin
Anto merlinpt desk

இது மனிதாபிமானமுள்ள, மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவருக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. ஈவிரக்கமற்ற இச்செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவி ரேகாவின் புகாரையடுத்து கணவன், மனைவி ஆகிய இருவர் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் செல்வாக்குள்ள குடும்பமெனினும், காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.

MLA Karunanidhi
MLA Karunanidhipt desk

பாதிக்கப்பட்ட மாணவி ரேகா, கணவனால் கைவிடப்பட்ட ஒரு தாயின் அரவணைப்பில் வளர்ந்து மருத்துவராகும் கனவுடன் உழைத்திட வீட்டுப்பணியில் சேர்ந்துள்ளார். உழைத்து சம்பாதித்துப் படிக்கத் துடிக்கும் ஒரு ஏழைச் சிறுமியை ஊக்கப்படுத்த வேண்டிய பக்குவம் இல்லாமல், நெஞ்சில் ஈரமின்றி இவ்வாறு கொடுமைப்படுத்தும் இவர்களின் கொடிய போக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கணவன் தனது மனைவியை அடிக்கவோ, பெற்றோர் தமது பிள்ளைகளை அடிக்கவோ, ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கவோ கூடாது என்கிற 'மனித உரிமை' குறித்த விழிப்புணர்வு, உலகெங்கும் வளர்ந்துள்ள இக்காலச் சூழலில், இவர்களால் எப்படி இவ்வாறு நடந்து கொள்ளமுடிகிறது என்பது பேரதிர்ச்சி அளிக்கிறது.

ரேகாவை நள்ளிரவு வரை வேலை செய்யச்சொல்லி அடித்ததுடன், சாதியைச் சொல்லியும் இழிவுபடுத்தி கொடுமைப்படுத்தியதாகவும் சொல்லி, ரேகா கதறுவது நெஞ்சை உலுக்குகிறது. இந்நிலையில், குற்றம் சாட்டப்படுள்ளவர்களைக் கைது செய்வது உள்ளிட்ட சட்டப்படியான நடவடிக்கைகளில் அரசு உறுதியாக இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். பதினெட்டு வயதுக்கும் கீழாகவுள்ள சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் குற்றச் செயல்களைத் தடுத்திட அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு தழுவிய அளவில் இது குறித்து விரிவான புலனாய்வை மேற்கொள்ள நீதிபதி ஒருவரின் தலைமையிலான ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டுமெனவும் விசிக சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விசிக  அறிக்கை
விசிக அறிக்கைpt desk

பாதிக்கப்பட்ட ரேகாவுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி அளிக்க வேண்டிய இழப்பீட்டை வழங்குவதுடன், அவருடைய மருத்துவக் கல்விக்கான கனவை நனவாக்கிட ஆவண செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுக்கு விசிக சார்பில் கோரிக்கை விடுக்கிறோம்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com