தமிழகத்தில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட வேண்டும் என்பது அரசின் உத்தரவு. ஆனால் விழுப்புரம் ரயில் சந்திப்பு நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை நடைபெறுவது அம்பலமாகியுள்ளது.
நள்ளிரவு 12 மணிக்கும் எளிதில் மதுபானம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் சூழல் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை புகார் மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறும் மக்கள், இதில் ஆளும் கட்சி நிர்வாகிகளின் தலையீடு உள்ளதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பழனியை தொடர்புகொண்டு கேட்டபோது, டாஸ்மாக் மேலாளரிடம் விசாரிப்பதாக கூறியிருக்கிறார். டாஸ்மாக் மேலாளர் ராமுவிடம் கேட்டபோது, மதுவிற்பனை நடைபெறும் பாருக்கு லைசென்ஸ் இல்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தெரிவித்திருக்கிறார்.