விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கொங்கரப்பட்டு கிராமத்தில் ஆம்புலன்ஸை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கொங்கரப்பட்டு கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன் என்பவரின் மகள் ரம்யா காணாமல் போனதாக (12-07-21) செஞ்சி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் நேற்று அதே கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டார்.
மாணவி ரம்யாவும் (17) பக்கத்து ஊரைச் சேர்ந்த மேகநாதலிங்கம் (17) என்பவரும் காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் அவர் தான் தன் மகளை கடத்தி சென்று இருப்பார் என்ற அடிப்படையில் புகார் அளித்திருந்தார் ரம்யாவின் தந்தை பச்சையப்பன். இதைடுத்து நேற்று ரம்யா சடலமாக கிணற்றில் கிடப்பதைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து புகார் அளித்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் போராட்டத்தில் இறங்கினர்.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவின் சமரச பேச்சுவார்த்தைக்கு பிறகு சடலம் மீட்கப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. ரம்யா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தரப்பில் கூறப்பட்ட நிலையில் ரம்யா நட்பு வட்டத்தில் உள்ள மணியம்பட்டு கிராமத்தை சார்ந்த மேகநாதலிங்கம் உள்ளிட்ட ஏழுபேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்
இதை தொடர்ந்து நேற்று மாலை டிஐஜி பாண்டியன் செஞ்சி காவல் நிலையத்தில் ரம்யாவின் பெற்றோர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார். பின்னர் மணியம்பட்டு கிராமத்தை சேர்ந்த மேகநாதலிங்கம், ஜெயக்குமார், ஜெயப்பிரகாஷ், ஜெயபால், ஜெயமூர்த்தி, ராஜா, ஆனந்த் ஆகிய 7 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இந்நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் இன்று அறிவித்த நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வு முடிந்து மாணவி உடலை வாங்க உறவினர்கள் மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
மாணவி ரம்யாவை கொலை செய்து கிணற்றில் போடப்பட்டுள்ளதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மீண்டும் மாணவி ரம்யாவின் உடலை நீதிபதி முன்பு உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து கொங்கரப்பட்டு கிராமத்தில் உள்ள ரம்யாவின் உறவினர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.