விழுப்புரம் மாவட்டத்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
வெள்ளம்புத்தூர் கிராமத்தில் 8 வயது சிறுவன் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டுள்ளார். மேலும், அவனது 14 வயது சகோதரியும், தாயும் கடுமையாகதாக்கப்பட்டுள்ளனர். சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பபட்டுள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்த தாய்க்கும், அவரது மகளுக்கும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. நினைவு திரும்பாத நிலையில், இருவருக்கும் தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவம் நிகழ்ந்த வெள்ளம்புத்தூர் கிராமத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத்தலைவர் முருகன் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்து நான்கு நாட்கள் ஆகியும் வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகளைப் பிடிக்க திருக்கோவிலூர் டிஎஸ்பி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்போது ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரும் உடனிருந்தனர். அவர்களிடம் சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் அறிவுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு ஆவன செய்யப்படும் என்றும் முருகன் உறுதியளித்துள்ளார்.
இதனிடையே, இந்த சம்பவத்தில் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. காவல்துறையினர் இந்த விவகாரத்தில் மிகவும் மெத்தனமாக செயல்படுவதாக சமூக செயல்பாட்டாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கேரளாவில் ஆதிவாசி இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அந்த மாநிலத்தின் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் அதனை மூடி மறைக்காமல் தலைக்குனிவாக கருதுகின்றனர். ஆனால், நான்கு நாட்கள் ஆகியும் இந்த சம்பவத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, கண்டன குரல்களும் பெரிய அளவில் எழவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
காவல்துறையினர் தரப்பில், ‘அதே பகுதியில் சிறுமிகள் மற்றும் பெண்கள் குறித்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதில் சைகோ போன்ற செயல்பாடுகள் இருக்க வாய்ப்புள்ளதாகவும்’ தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தெரியவில்லை என்றும் பாதிக்கப்பட்ட தாயும், மகளும் நினைவு திரும்பாத நிலையில் இருப்பதால் விசாரணையில் சிக்கல் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.