விழுப்புரம் அருகே வெங்கந்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட 25 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் வெங்கந்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கோடு பள்ளி மாணவர்களுக்கு நேற்று சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. அந்த சத்து மாத்திரை சாப்பிட்ட 25 மாணவ மாணவியருக்கு லேசான வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து உடனடியாக இவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவர்கள் வீடு திரும்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மாணவர்களின் நலன் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்து மாணவர்களுக்கு தைரியமூட்டினார்.