திண்டிவனம் அருகே நடந்த இந்த கொடூரத்தை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. கணவரை பிரிந்து தனியே வாழ்ந்த பெண்மணி ஒருவர் வேலை நிமித்தமாக புதுச்சேரியில் வசித்த நிலையில், தனது 7 மற்றும் 9 வயதுடைய மகள்களை திண்டிவனம் அருகே உள்ள தாய் வீட்டில் விட்டு வளர்த்து வந்தார். இந்த இரு சிறுமிகளுக்கும் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதுதான் இருவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.
அதுவும், சிறுமிகளின் உறவினர்கள் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் என 15 பேர் 2017 முதல் 2019 ஆம் ஆண்டு வரை இரு சிறுமிகளையும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்துள்ளனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு நடந்து வந்த காலத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட 7வயது சிறுமி உயிரிழந்தார்.
சாட்சிகளின் விசாரனை முடிந்து நீதிபதி வினோதா இறுதி தீர்ப்பு வழங்கினார். அப்போது, 15 பேருக்கு தலா 20ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி, தலா 37 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். வழக்கில் தண்டனை பெற்றவர்களின் உறவினர்கள், நீதிமன்ற வளாகத்தில் ஒன்று திரண்டு கதறி அழுததால் அந்த இடமே பரபரப்பானதாக காட்சியளித்தது.