புதிய தலைமுறை செய்தி எதிரொலி: இருளர் குடும்பங்களுக்கு கிடைத்த அடிப்படை வசதி

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: இருளர் குடும்பங்களுக்கு கிடைத்த அடிப்படை வசதி

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: இருளர் குடும்பங்களுக்கு கிடைத்த அடிப்படை வசதி
Published on

விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வரும் இருளர் குடும்பங்கள் பற்றிய செய்தியை புதிய தலைமுறை வெளியிட்டதை தொடர்ந்து,  அந்தப் பகுதிக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மின்விளக்கு, குடிநீர் மற்றும் சாலை ஆகிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார்

விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூருக்கு அடுத்துள்ளது எண்ணாயிரம் என்கிற கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 12 இருளர் குடும்பங்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஏரிக்கரை ஓரத்தில் இவர்களுக்கு அரசு மனைப்பட்டா வழங்கியுள்ளது. மனைப் பட்டா வழங்கி பல ஆண்டுகளாகியும் அவர்களின் எந்த அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படாமலேயே இருந்து வருகிறது.

குடிநீர், மின்சாரம், கழிவுநீர் வெளியேற்றம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி அந்த 12 குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதற்கு யாரும் முன் வரவில்லை என்றார்கள் அந்த மக்கள்.

இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிட்டவுடன், மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று அந்த மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அது மட்டும் இல்லாமல் வருகின்ற சுதந்திர தினத்திற்குள் உங்களுக்கான அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து தருவதாக உறுதியளித்தார்.

அந்த வகையில் நேற்று எண்ணாயிரம் கிராமத்திற்கு நேரில் வந்த ஆட்சியர் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர், மின்சாரம் தெருவிளக்கு, சாலை வசதி போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய உறுதியளித்தார். மேலும், அந்த மக்கள் விரைவில் வீடு கட்டுவதற்கு நிர்வாகம் முயற்சி செய்யும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

எண்ணாயிரம் கிராமத்திற்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அவரது குடும்பத்தினரை அந்த மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தங்களுக்கு உடனடியாக இந்த உதவிகளை செய்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்

-ஜோதி நரசிம்மன்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com