செய்தியாளர்: வி.பி. கண்ணன்
கரூரில் பிரகாஷ் என்பவர் தனக்கு சொந்தமான நூறு கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை தனது மகள் சோபனா என்பவருக்கு தான செட்டில்மெண்ட் செய்து கொடுத்திருந்தார். இந்த நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவர் சகோதரர் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு எழுதிக் கொடுக்கும்படி பிரகாஷை அடித்து மிரட்டி உள்ளனர். இதில் காயமடைந்த பிரகாஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துள்ளார்.
அப்போது பிரகாஷின் மகள் சோபனாவின் பெயரில் இருந்த 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி உள்ளிட்டோர் போலி ஆவணங்களை பயன்படுத்தி தங்களுக்கு வேண்டியவர்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்ததாகவும், அந்த நிலத்தை மீட்டுத் தரும்படி வாங்கல் காவல் நிலையத்தில் பிரகாஷ் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக வாங்கல் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளில் கடந்த மாதம் 22 ஆம் தேதி வழக்கு பதியப்பட்டது.
இதேவேளையில், பிரகாஷுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை சிலர் போலி ஆவணங்களின் மூலம் பதிவு செய்துவிட்டு தன்னை மிரட்டுவதாக கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதர் அளித்த புகாரின் பேரில், கரூர் நகர காவல் நிலைய போலீசார் 7 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் தன்னை கைது செய்யக் கூடும் எனக்கூறி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் இருமுறை முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், நேற்று கேரள மாநிலம் திருச்சூரில் பதுங்கியிருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்த போலீசார், அவரை கரூருக்கு அழைத்து வந்து 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜபடுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில் பிரகாஷ் தனக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை தனது மகள் சோபனாவின் பெயருக்கு தான செட்டில்மெண்ட் செய்து கொடுத்தாலும் அந்த தான செட்டில் பத்திரங்களை பிரகாஷ் மறைத்து வைத்திருந்தார். ஆனால், சோபனா பெயரில் இருந்து பத்திரங்கள் காணாமல் போய்விட்டதாக சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டு அதன் பெயரில் காணாமல் போன பத்திரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிருதிவிராஜ் சான்றிதழ் அளித்ததாகக் கூறப்படுகிறது. அந்த சான்றிதழ் அடிப்படையில் சோபனா பெயரில் இருந்த 22 ஏக்கர் நிலத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பினர் தங்களுக்கு வேண்டியவர்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் அளித்த சான்றிதழ் போலியானது என கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார், வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரிதிவிராஜை சென்னையில் கைது செய்தனர். இதையடுத்து சென்னையில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் பிரிதிவிராஜை கரூர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வரப்படுகிறார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது வில்லிவாக்கம் காவல் ஆய்வாளராக உள்ள பிரிதிவிராஜ், எம்ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலத்தில் கரூர் நகர காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.