வில்லிவாக்கம் அருகே திருமணம் ஆன ஒரே மாதத்தில் கணவரின் நகைகள் மற்றும் பணத்தை மனைவியே திருடிச்சென்றுள்ளார்.
சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 53). இவர் சுசிலா என்ற பெண்ணை திருமணம் செய்து, அவருடன் கடந்த 18 வருடங்களாக ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட, சுசிலாவை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெங்கட்ராமன் விவாகரத்து செய்துள்ளார். இதையடுத்து இரண்டாவது திருமணம் செய்துகொள்ள நினைத்த அவர், அதற்காக திருமண இணையதளம் ஒன்றில் பெண் பார்த்துள்ளார்.
அப்போது ஆந்திராவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ரமணம்மா (36) என்ற பெண்ணை, 2வது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். ரமணம்மாவிடம் இதுகுறித்து வெங்கட் பேசியபோது, தான் உறவினர்கள் என யாரும் இல்லாமல் ஆதரவின்றி வாழ்ந்து வரும் பெண் என கூறியுள்ளார். இதையடுத்து இவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. ஒரு மாதமாக இருவரும் வில்லிவாக்கத்திலுள்ள வெங்கட்ராமன் இல்லத்தில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் வெங்கட்ராமன் வேலைக்கு சென்ற நேரத்தில், வீட்டின் பிரோவில் இருந்த ரூ.80 ஆயிரம் ரொக்கம் மற்றும் 4 சவரன் நகையை எடுத்துக்கொண்டு ரமணம்மா வெளியே சென்றுள்ளார்.
வீடுதிரும்பிய வெங்கட்ராமன் மனைவியை காணவில்லை என்றதும் போன் செய்துள்ளார். ஆனால் ரமணம்மா அவரது போனை எடுக்கவில்லை. இதையடுத்து வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகளை காணவில்லை என்பதை வெங்கட் தெரிந்துகொண்டார். பின்னர் தொடர்ந்து ரமணம்மாவை அழைத்தபோது, தனக்கு உடம்பு சரியில்லை என்றும், வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அலுவலகத்தில் விடுப்பு வாங்கிக்கொண்டு ஆந்திரா புறப்பட்டுச்சென்ற வெங்கட், ரமணம்மா வீட்டை காலி செய்திருப்பதை அறிந்தார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து, வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளா. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.