உடுமலை அருகே உணர்ச்சிவசத்துடன் ஒட்டு மொத்த கிராமமே ஆசிரியையின் வருகையை எதிர்பார்த்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பாசப் போராட்டம் நடத்திவருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கல்லாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது கொம்மேகவுண்டன் துறை கிராமம். மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு அருகே கடைக்கோடியில், கண்ணுக்கு எட்டாத தூரத்தில் மறைவாக அமைத்திருக்கும் இக்கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் இளம் வயதுடைய பெரும்பாலான ஆண்களும் பெண்களும் பட்டப்படிப்பு முடித்தவர்களாக உள்ளனர். வழிகாட்டி இல்லாமல் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல், கிடைத்த கூலி வேலைகளை செய்து, தங்கள் வாழ்வாதாரத்தை நிறைவேற்றிக் கொள்கின்றனர். தங்கள் ஊரிலுள்ள ஐந்தாம் வகுப்புவரை உள்ள தொடக்கப்பள்ளியில் ஏற்கெனவே பணியாற்றிய ஆசிரியர் மீண்டும் இதே பள்ளியில் வந்து பணியாற்ற வேண்டும் என இம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
21 வருடங்களுக்கு முன்னால் இப் பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தவர் அசோக்குமார். குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பாமர மக்களுக்கும் படிப்பறிவை கொடுத்து, பகுத்தறிவை உருவாக்கி, இம்மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தன் பணிமுடிந்து மீதமுள்ள நேரங்களில், இப்பகுதியில் உள்ள குடும்ப பிரச்னைகளை தீர்த்து வைப்பதும், போதை ஆசாமிகளை திருத்துவதும், தேவையான உதவிகளையும், ஆலோசனைகளை வழங்கியும் சமூக சேவை செய்து வந்துள்ளார். ஆங்கில வழி கல்விக்கு இணையாக இப்பள்ளியிலேயே மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்று கொடுத்து, பெரும்பாலான ஆண்களையும் பெண்களையும் பட்டப்படிப்பு படிக்கும் வரை ஊக்கப்படுத்தி, சிறந்த வழிகாட்டியாய் இருந்துள்ளார்.
ஆறு வருடங்களுக்கு முன்பு பணி மாறுதல் பெற்று சென்றபோது, பணி உயர்வு பெற்று சென்றதாக அதிகாரிகள் கூறியதோடு, மீண்டும் இதே பள்ளியில் அவர் பணியாற்றுவார் என உறுதி அளித்தனர். அப்போது பணி மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், அவரின் பணி உயர்வுக்கு தடையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக தங்களது எதிர்ப்பை கைவிட்டு, மீண்டும் இதே பள்ளிக்கு திரும்பி வருவார் என எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். தற்போது மூன்று நாட்களுக்கு முன்பு புதிய ஆசிரியர் பணி அமர்த்தப்பட்டபோது, தாங்கள் விரும்பிய ஆசிரியர் வருவார் என கனவுடன் காத்திருந்த கிராம மக்கள் ஏமாற்றத்துடன் மன வேதனை அடைந்துள்ளனர்.
இதனால் தற்போது ஆசிரியர் அசோக்குமாரை இதே பள்ளியில் மீண்டும் பணி அமர்த்தும் வரை, தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என கூறியுள்ளனர். குழந்தைகளும் அங்குள்ள விநாயகர் கோவிலில், சீருடை அணிந்து தாங்களாகவே, தங்களுக்குள்ளாகவே பாடம் கற்றுக் கொள்கின்றனர். இதுவரை கல்வி அதிகாரிகள் யாரும் வரவும் இல்லை, கோரிக்கைகளை நிறைவேற்றவும் இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுவதுடன், ஆசிரியர் அசோக்குமாரை இப்பள்ளியில் மீண்டும் பணியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.