வீர மரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு கிராம மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மவட்டத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் தர்ஹால் என்ற பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினரின் ராணுவ முகாம் அமைந்துள்ளது. அங்கு கடந்த ஆக.,11 அன்று அதிகாலை முகாமின் எல்லையை கடந்து ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 2 பேர், திடீரென ராணுவ முகாமின் மீது தாக்குதல் நடத்தினர்.
அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து இந்திய படையினரால் எதிர் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த பதிலடி தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்ட நிலையில், 3 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
அதில், வீர மரணம் அடைந்த மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனும் ஒருவர். அவரது உடல் மதுரை விமான நிலையத்தில் இருந்து அவரது சொந்த ஊருக்கு திருமங்கலம் வழியாக கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில், ராணுவ கிராமம் என அழைக்கப்படும் சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ மாணவிகள் கைகளில் பூக்களுடன் வீர மரணம் அடைந்த டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ஏனெனில் திருமங்கலம் அடுத்த சாத்தங்குடி என்ற கிராமத்தில் 300-க்கும் மேற்பட்டோர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருவதால் இந்த கிராமத்தை ராணுவ கிராமம் என அழைக்கப்பட்டு வருவது நினைவுகூரத்தக்கது.