“சத்தியம் செய்தோம்; சாராயம் காய்ச்சுவதை விட்டோம். ஆனாலும் அரசு..” - அடிப்படை வசதிகளை கோரும் கிராமம்!

“சாராயம் காய்த்து சமூக எதிரிகளாய் வாழ்ந்த போதிலும் கோவில் முன் செய்த சத்தியத்தால் எங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொண்டோம்” எனக்கூறும் திருப்பூர் மாவட்டம் மீன்குட்டை பகுதி மக்கள், தங்களுக்கான அடிப்படை வசதிகளைக் கோரி காத்திருக்கின்றனர்,
மீன்குட்டை
மீன்குட்டைpt desk
Published on

செய்தியாளர்: சுரேஷ்குமார்

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பின்பு கள்ளச்சாராயம் புழக்கம் நிறைந்த பகுதிகளில் காவல்துறையின் கண்கள் அழுத்தமாக பதிந்துள்ளது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த மீன்குட்டை பகுதியை சேர்ந்த மக்கள் மீதும் பதிந்துள்ளது. ஆனால் ஒரு திருத்தம். இவர்கள் மீது பட்டுள்ளது, சந்தேகப் பார்வையல்ல. சந்தோஷப் பார்வை. ஏன் தெரியுமா?

காரணம், இவர்கள் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் சாராயம் காய்ச்சி பிழைப்பதையே பிரதான தொழிலாக கொண்டு, அதையே வாழ்வாதாரமாக வைத்து வாழ்ந்துள்ளனர். ஆனால் 20 வருடங்களுக்கு முன் அங்கிருந்த சில காவல் அதிகாரிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் தங்கள் ஊரில் உள்ள கருப்பராயன் கோவில் முன்பாக இவர்கள் ஒரு சத்தியம் எடுத்துள்ளனர். அதன்பேரில் சாராய தொழிலை விடுத்து தற்போது நல்வழியில் தங்கள் வாழ்க்கையை தொடர்ந்து வருகின்றனர்.

கருப்பராயன் கோவில்
கருப்பராயன் கோவில்pt desk

விவசாயம், அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளி, இட விற்பனையாளர்.... இதுதான் மீன்குட்டை பகுதியில் வசிக்கும் மக்களின் தற்போதைய பணியாக மாறி இருக்கிறது.

“20 வருடங்களுக்கு முன்னர் சாராயம் விற்பனையால் நாங்கள் அடைந்த துயரம் பல. ஏன் இந்த ஊரில் பிறந்தோம் என பலரும் கவலையுற்றனர். அன்று வாழ்ந்த வாழ்க்கையில் நாங்கள் பட்ட அவதிகளை, இன்றும் எங்களால் மறக்க முடியாது. தற்போதைய எங்கள் வாழ்க்கை நிம்மதி அளிக்கிறது” என தெரிவிக்கிறார் அவ்வூரை சேர்ந்த அவினாசியப்பான்.

மீன்குட்டை
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் | “ரூ.10 லட்சம் இழப்பீடு எப்படி வழங்க முடியும்?” - உயர்நீதிமன்றம்

சாராயத் தொழிலில் ஈடுபடுபவர்கள் தயவு செய்து அடுத்தவர் வாழ்க்கையை கெடுக்கும் இத்தொழிலை விட்டு வெளியேற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

20 வருடங்களுக்கு முன்னர் மீன்குட்டை பகுதியில் வசிக்கும் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சாராய விற்பனையை மையமாக வைத்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். பின்னர் சத்தியத்தின் அடிப்படையில் நல்வழியில் திரும்பி உள்ளனர். தங்கள் எதிர்கால தலைமுறை, குடும்பம் என பல்வேறு காரணங்களுக்காக தங்கள் வாழ்க்கையை திருத்திக் கொண்டனராம் அம்மக்கள்.

மீன்குட்டை
மீன்குட்டைpt desk

தாங்கள் திருந்தி வாழும்போதும், தங்களுக்கு அரசு போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து வாழ்வாதாரத்தை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது. தங்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்து, தங்கள் வாழ்வாதாரத்துக்கு வழிசெய்து தரவேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

மீன்குட்டை
வீட்டை இடிக்க முயன்ற அதிகாரிகள்... இளைஞர் விபரீத முடிவு; அதிகாரிகள் மீது பாய்ந்த நடவடிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com