ஒரு கிராமமே சேர்ந்து, ஊரிலுள்ள எல்லோருமே வீட்டை காலி செய்துவிட்டு திருப்பதிக்கு சாமி தரிசனத்துக்காக சென்றுள்ளனர்! ஊரில் ஒருவருமே இல்லாததால், அங்குள்ளவர்களை பாதுகாக்க, பாதுகாப்பு பணியில் போச்சம்பள்ளி போலீசார் மற்றும் ஊராட்சி தலைவர் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்துள்ள வசந்தபுரம் கிராமத்தில் சுமார் 45 குடியிருப்பு வீடுகள் உள்ளன. 4 வருடத்திற்கு ஒரு முறை ஊர் வழக்கப்படி ஊரில் உள்ள அனைவரும் திருப்பதி கோயிலுக்கு சென்று வருவது இங்கு வழக்கமாம். அந்த வகையில் நேற்று இரவு வசந்தபுரம் கிராம மக்கள் அனைவரும் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளனர்.
முதியோர்கள் மற்றும் நோயுற்றோர் சிலர் மட்டுமே கிராமத்தில் உள்ள நிலையில் ஊரில் உள்ள அனைவரும் சென்றுவிட்டதால் கிராமமே தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. இதனையறிந்த போச்சம்பள்ளி காவல் ஆயவாளர் பிரபாவதி, கிராமத்தின் பாதுகாப்பிற்காக இரண்டு காவலர்களை நியமித்துள்ளார். அதேபோல் ஊராட்சி தலைவர் எஸ்.ரங்கநாதன் கிராமத்தில் அவ்வப்போது பார்வையிட்டு பாதுகாப்பு அளித்து வருகிறார். ஊரே காலி செய்து திருப்பதி கோவிலுக்கு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.