செய்தியாளர்: கருப்பஞானியார்
மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட 11 குடும்பத்தினர் அளித்துள்ள கோரிக்கை மனுவில், "விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செல்லம் வடக்கு மற்றும் தெற்குத் தெரு பகுதியைச் சேர்ந்த 11 குடும்பங்களை கடந்த நான்கு ஆண்டுகளாக ஊரை விட்டு கிராம நிர்வாகத்தினர் ஒதுக்கி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 2023-ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நிர்வாகத்தினர் யாரையும் ஒதுக்கி வைக்கவில்லை. சரிசமமாகத்தான் பழகி வருகிறோம். கோயிலுக்குள் அனுமதிக்கிறோம் என்று வாக்குமூலம் கொடுத்ததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு 14.4.2024 ஆம் தேதி நடந்த சித்திரை வெண்குடை திருவிழா முடிந்தவுடன் பொது பண்டை சார்ந்தவர்களுக்கு ஊர் சுருள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி எங்கள் 11 குடும்பங்களை சேர்ந்த பெண்கள் ஊர் சாவடிக்கு சென்று சுருள் கேட்டபோது கொடுக்க முடியாது என தரக்குறைவாக பேசி அனுப்பி விட்டனர்.
இது தொடர்பாக 26.4.2024 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் மனுவை பெற்ற காவல்துறை தரப்பு இது சம்பந்தமாக சமாதான கூட்டம் நடத்துவதாக வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கடந்த 3.5.2024 ஆம் தேதி அனுப்பி விட்டனர்.
ஆனால், வட்டாட்சியர் மனுவை கண்டு கொள்ளவில்லை. எனவே முதல்வரின் தனி பிரிவிற்கு, இது சம்பந்தமாக 18.5.24 அன்று புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 7.6.2024 ஆம் தேதி வட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் போடப்பட்டது. ஆனால், எதிர்த் தரப்பை சேர்ந்த ஊர் நிர்வாகிகள் இதில் கலந்து கொள்ளவில்லை. எனவே வட்டாட்சியர் ஒரு வாரத்தில் எதிர்த் தரப்பை மீண்டும் அழைத்து சமாதான கூட்டம் நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டது.
ஆனால் இதுவரை எந்த கூட்டமும் நடைபெறவில்லை. எதிர்த் தரப்பினர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருங்கள் என்று வட்டாட்சியர் கூறுகிறார். வருவாய் வட்டாட்சியர் தனது கடமையை நேர்மையாக செய்ய மறுக்கிறார். எனவே இது சம்பந்தமாக நீதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென" அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சொல்வதென்?
இது குறித்து பாதிக்கப்பட்ட நபரான சிங்க ராஜா பேசியபோது... நான்காண்டுகளாக ஊர் கிராம நிர்வாகத்தினர் 11 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் நல்லது கெட்டது என எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க அனுமதிக்க மறுக்கின்றனர். பலமுறை காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரியிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பொதுவான ஊர் சாவடி மற்றும் கோயில் குளத்தில் தண்ணீர் எடுக்க நிர்வாகத்தினர் தடை விதித்துள்ளனர். இதனால் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவரான விஜயலட்சுமி தெரிவித்தார்.