செய்தியாளர்: செந்தில் கரிகாலன்
தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய், கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து, ஆகஸ்ட் 22-ம் தேதி கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். கொடியின் விளக்கம், கட்சியின் கொள்கைகள், நிர்வாகிகள் யார் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது. மாநாடு , விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் 23-ம் தேதி நடைபெறவிருக்கிறது. மாநாட்டு அனுமதிக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
இது ஒருபுறமிருக்க, முதல் மாநாட்டுக்கு, பல்வேறு மாநில முதல்வர்கள் தொடங்கி பல முக்கிய வி.ஐ.பிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட இருக்கிறது. தவிர திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முன்னாள், எம்.பி, எம்.எல்,ஏக்கள் மாநாட்டிலேயே கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கூடுதலாக, தற்போது மாநாட்டுக்கு காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை அழைக்க விஜய் விரும்புவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது ஒருபுறமிருக்க, விஜய்யின் அரசியல் வருகை, தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளிடையே சில தாக்கங்களை உண்டாக்கியுள்ளன. அதிலும் ஆளும் கட்சியான திமுகவில் விஜய் குறித்த விவாதங்கள், விமர்சனங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன.
திருச்சி மாவட்டம், லால்குடியில் திமுக மத்திய மாவட்டம் சார்பில் உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் நேரு, ``தமிழ்நாட்டில் நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களிலும் திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. குறிப்பாக சட்டமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மை, அதேபோன்று நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கும் 40 என்று தொடர் வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகம் பெற்று வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களின் கடுமையான உழைப்பு ஆகும். லோக்சபா தேர்தல் கூட்டணிபோல், வருகிற சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி அமையும் சூழல் இல்லை. சீமான் ஒரு புறம், புதிதாக ஒருவர் கட்சி ஆரம்பிக்கிறார் அவர் ஒரு புறம். பாமக தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருகிறது. இப்படி இருக்கும்பொழுது வருகிற சட்டமன்றத் தேர்தலில், நாடாளுமன்றத் தேர்தலில் உள்ள சூழல்போன்று சுமூகமாக இருக்காது. தொடர்ந்து தொண்டர்கள், நிர்வாகிகள் கடுமையாக பணியாற்றி அமைச்சர் உதயநிதி அவர்கள் கரத்தை வலுப்படுத்த வேண்டும்'’ எனப் பேசியிருந்தார்.
சீமான் இப்போது என்றில்லை, கட்சி ஆரம்பித்த நாள் முதலாகவே, திமுகவைக் கடுமையாக விமர்சித்து வருகிறவர்தான். அதேபோல, பாமகவும் 2014 தொடங்கி கடந்த நான்கு தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிடவில்லை. அப்போது தொடங்கி திமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் பாமகவினர். இதில் கூடுதலாக இணைந்திருப்பது விஜய்தான். அதனால், விஜய்யின் வருகையையொட்டியே நேரு, கட்சி உறுப்பினர்களை எச்சரித்திருக்கிறார் என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் நேருவின் பேச்சுக்கு எதிர்வினையாக, ராஜ்யசபா எம்.பியான கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், ``ஒரு காலத்தில் விஜயகாந்துக்குக் கூடாத கூட்டமா?. விஜயகாந்த் கட்சியின் தற்போதைய நிலை என்ன? திமுகவினர்தான் மூச்சுக்கு 300 முறை விஜய் பற்றி பேசுகிறார்கள் என கருத்து தெரிவித்திருக்கிறார்.
இது ஒருபுறமிருக்க, சென்னை மாங்காட்டில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன், ''நடிகர்கள் எல்லாம் ஒரு படத்துக்கு 200 கோடி, 250 கோடி வாங்குறாங்க. உங்களுடைய ரசிகர்கள் எல்லாம் உங்கள் மீது பிரியமாகத் தானே இருக்கிறார்கள். படம் ரிலீஸ் ஆகும்பொழுது ஃப்ரீயா டிக்கெட்டை கொடுக்கலாமே? ஒரு டிக்கெட் 2000 ரூபாய்க்கு கொடுக்கிறார்கள். உண்டா இல்லையா? அவருடைய ரசிகர்களுக்கே 2000 ரூபாய்க்கு விற்கிறார்கள். இவர்களால் நாட்டை பாதுகாக்க முடியுமா?
போன வருஷம் மட்டும்தான் முதல் மற்றும் இரண்டாவது மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பண பரிசு கொடுத்திருந்தார்கள். கட்சி ஆரம்பிக்கப்போகிறோம் என்று தெரிந்தவுடன் அதை செய்கிறார்கள். அதனால் ஒரு வருடத்திற்கு இந்த மாதிரி செய்துள்ளார்கள். இதெல்லாம் ஜனங்களுக்கு தெரியும். ஆனால் நாங்கள் அப்படி அல்ல'' என மறைமுகமாக விஜய்யை விமர்சித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் வருகை திமுகவில் ஒரு பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ``விஜய்யை பார்த்து திமுக ஏன் பயப்படவேண்டும்?’’ என தொடர்ச்சியாக கருத்துத் தெரிவித்து வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். ஆனால், அதிமுகவிலும் விஜய்யை விமர்சித்து நிர்வாகிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.