தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் “தமிழகத்தில் திமுக ஆட்சி மிகவும் சிறப்பாக உள்ளது” என்று கூறியுள்ளார். மேலும், “துபாயில் சிகிச்சைக்கு சென்றிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், விரைவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார்” என்ற தகவலையும் அவர் பகிர்ந்துள்ளார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துரை கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தேமுதிக திருமங்கலம் ஊராட்சி செயலாளர் செல்லதுரை - மீனா தம்பதிக்கு இன்று திருமணம் நடந்தது. இதை தேமுதிக தலைவர் விஜயகந்தின் மகன் விஜயபிரபாகரன் தலைமை தாங்கி நடத்திவைத்தார்.
திருமண விழாவை தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஜயபிரபாகரன், “ தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த், உடல்நல சிகிச்சைக்காக துபாய் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்றிருக்கும் அவருக்கு, மருத்துவர்கள் சிறந்த சிகிச்சையை அளித்து வருகின்றனர். விரைவில் அவர் பூரண குணமாகி வீடு திரும்புவார்.
தொடர்புடைய செய்தி: “எனக்கு எங்க அப்பா கிங் ஆக இருக்க தான் ஆசை” - விஜய பிரபாகரன்
சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு தேமுதிக கட்சி தொய்வாக இருப்பது என்பது தவறு. அதிமுக, திமுக கட்சிகள் தோல்வியை தழுவியபோது எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலையில் தான் இப்போதும் நாங்கள் உள்ளோம். தேமுதிக கட்சியில் விரைவில் மாற்றங்கள் ஏற்படும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக போட்டியிடுவதற்கான முடிவை, நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்” எனக் கூறினார்.
மேலும், “தமிழகத்தில் திமுக ஆட்சி மிகவும் சிறப்பாக உள்ளது. விஜயகாந்த் கூறுவதுபோல ஒரு ஆட்சி அமைந்து 6 மாதங்கள் முடிந்த நிலையில்தான் அந்த ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள முடியும்” என்றார்.
இந்த சந்திப்பின்போது திருச்சி வடக்கு மாவட்டத் தலைவர் குமார், தேர்தல் பிரிவு செயலாளர் கொ. தங்கமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் மண்ணை பழனிசாமி, லால்குடி ஒன்றிய செயலாளர் தேவராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அவருடனிருந்தனர்.