சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்...
ஆண்டுதோறும் தலைமை கழகத்தில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தி வருகிறோம், தேமுதிக ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி என்பது அனைவரும் அறிந்த உண்மை. நாம் அனைவரும் ஒரே குலம் ஒரே இனம் என்பதை உணர்ந்தவர் விஜயகாந்த். நாம் என்றைக்கும் சகோதர சகோதரிகள் தான். தேமுதிக என்றைக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு தோழனாக சகோதரனாக பாதுகாவலராக இருக்கும்.
மீண்டும் பழைய கம்பீரத்துடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனைத்து விழாக்களிலும் பங்கேற்க வேண்டும் என்று நீங்கள் துவா செய்ய வேண்டும். தேர்தலில் தேமுதிக சார்பில் இஸ்லாமிய சகோதரர்கள் பலரை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளோம். கட்சி ஆரம்பித்த பிறகு எத்தனையோ பேர் மாற்றுக் கட்சியிலிருந்து தேமுதிகவில் இணைந்தார்கள். இடையில் வந்தார்கள் சென்றார்கள். பல துரோகங்களை, எதிர்ப்புகளை இந்த கட்சி சந்தித்துள்ளது.
எத்தனையோ பேர் கட்சிக்கு வந்தார்கள் எத்தனையோ பேர் கட்சியை விட்டு போயுள்ளனர். ஆனால், ஒரு இஸ்லாமியர் கூட இந்த கட்சியில் இருந்து வெளியேறவில்லை என்பதை பெருமையாக பதிவு செய்கிறேன். வாழ்க்கையில் வெற்றி தோல்வி சகஜம். தொழிலில் வெற்றி தோல்விகள் வருவது போல் அரசியலில் பல சூழ்ச்சிகளை எதிர்த்து எதற்கும் அஞ்சாமல் துணிந்து தேமுதிக இன்றைக்கும் என்றைக்கும் மக்களுக்கான கட்சியாக நின்று அந்த வெற்றியை அடையும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெகுவிரைவில் முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். விஜயகாந்தின் எண்ணங்கள், கொள்கை என்னவோ அதுவாகதான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வருங்காலத்தில் தேமுதிக மக்களுக்கான கட்சிதான் என்பதை நிரூபிப்போம் என்றார்.