உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலை 6.10 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 71. மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல், தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின் இட நெருக்கடி காரணமாக ராஜாஜி அரங்கிற்கு மாற்றப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் சென்னை தீவுத்திடலுக்கு உடல் மாற்றப்பட்டது. தீவுத்திடலில் கட்சித்தொண்டர்கள், ரசிகர்கள், நண்பர்கள், அரசியல் தலைவர்கள் என பல தரப்பினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இன்று பிற்பகல் தீவுத்திடலில் இருந்து விஜயகாந்தின் உடல் மக்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டன.
முன்னதாக நேரில் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் பிரபு, “எங்க அப்பாவோட இறுதி ஊர்வலத்துக்கு நான் இல்ல; ஊர்ல இருந்தேன். அப்ப விஜயகாந்த் அண்ணன் இருந்து நான் என்ன பண்ணனுமோ அத முன்னாடி நின்னு பண்ணுனாரு. கடைசி வரைக்கும் இருந்து எங்க அம்மாகிட்ட ஒப்படச்சுட்டு போனவரு. ஏன்னா அவரும் சிவாஜிக்கு ஒரு பிள்ளை. அந்த வகையில் என்னோட குடும்பத்தோட வந்து மரியாதை பண்ணிட்டேன். தமிழ், தமிழ் மக்கள், திரையுலகம், புடுச்சவங்க மக்கள் என அனைவரது மனசுலேயும் என்னைக்கும் எனது அருமை நண்பர் கேப்டன் வாழ்ந்துக்கிட்டே இருப்பார்” என்று நெகிழ்ச்சியாக கூறினார்.