சிறிய கிராமத்தில் கேப்டனின் ரசிகை To தேமுதிக பொதுச்செயலாளர்.. பிரேமலதா விஜயகாந்த் கடந்து வந்த பாதை!

“என் மனைவி நிழல் சக்தி அல்ல.. நிஜ சக்தி.. மனைவிதான் கண் கண்ட தெய்வம்” என்ற மறைந்த விஜயகாந்த்தின் வார்த்தைக்கு பாத்திரமானவர்தான் பிரேமலதா.
premalatha vijayakanth
premalatha vijayakanthpt
Published on

ஒரு காலத்தில் எழுச்சியோடு பயணத்தை தொடங்கிய தேமுதிக இன்று மீண்டும் அந்த எழுச்சியுடன் பயணிக்க முயன்று வருகிறது. கணவரும், கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் மறைந்த நேரத்தில் கட்சிப்பொறுப்பை முழுமையாக ஏற்று அரசியலில் களமாடி வரும் பிரேமலதாவுக்கு இன்று பிறந்தநாள். இந்த நேரத்தில் ஆம்பூரில் ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து இன்று தேமுதிகவின் அதிகார மையாமாகியுள்ள பிரேமலதாவின் பின்னணியை சற்று புரட்டிப்பார்க்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு.

மதுரையில் பிறந்து எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் ஆயிரம் போராட்டங்கள், அவமானங்களுக்குப் பிறகு, அத்தனை தயாரிப்பாளர்களுக்கும் ஆதர்ச நாயகனாக மாறியவர்தான் விஜயகாந்த். குறிப்பாக 80 - 90களில் படுபிசியாக நடித்து வந்தார் விஜயகாந்த். ஒரு பக்கம் நடிப்பு, மறுபக்கம் ‘இல்லாதோர்க்கு இயன்றதை செய்வோம்’ என்று உதவிக்கரத்தை நீட்டி வந்தார். இதற்கிடையில், சிறுவயதிலிருந்தே தனது தீவிர ரசிகையாக மாறியிருந்த ஆம்பூரைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டிற்குச் சென்று பெண் கேட்கிறார் விஜயகாந்த்.

ஆம், அவர்தான் பின்னாட்களில் விஜயகாந்த்தின் முதுகெலும்பாகவே மாறிப்போன பிரேமலதா. 1969ம் ஆண்டு பிறந்த பிரேமலதா, இளங்கலை ஆங்கிலம் படித்து முடித்தவர். இப்படியாக இருக்க, அப்போதைய திமுக தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி முன்னிலையில் 1990ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி விஜயகாந்த்திற்கும் - பிரேமலதாவிற்கும் திருமணம் நடைபெற்றது.

premalatha vijayakanth
அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதி; தொகுதிகள் என்னென்ன?

திருமணத்திற்கு பிறகு விஜயகாந்த்தின் ரசிகர் மன்றம் மற்றும் கல்லூரிகளை கவனித்துக்கொண்டார் பிரேமலதா. 1 வயது குழந்தையாக இருந்தபோதே விஜயகாந்தின் தாய் உயிரிழந்த நிலையில், தாயாகவும், தாரமாகவும் விஜயகாந்திற்கு வலிமையாக நின்றார் பிரேமலதா. ஒரு பேரிடர் என்றால், லட்சங்களில் நிதி வழங்குவது, நிவாரணப்பொருட்களை கொடுப்பது, நலத்திட்ட உதவிகளை செய்வது என்று இருந்த விஜயகாந்த்தின் உதவி மனப்பான்மைக்கு அவர் என்றும் தடையாக இருந்ததில்லை என்பதை விஜயகாந்தே பேட்டி ஒன்றில் நெகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார்.

அதேபோல் 2005 காலகட்டத்தில் தேமுதிக என்ற கட்சியை விஜயகாந்த் தொடங்கியபோது, கட்சியில் இணைந்து கட்டமைப்பை வலிமைப்படுத்தினார் பிரேமலதா. குறிப்பாக, 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக 41 இடங்களில் போட்டிபோட்டபோது, சூறாவளியாக சுழன்று பரப்புரையும் செய்தார்.

premalatha vijayakanth
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: ரூ.2 கோடியே 50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல்

விஜயகாந்த் அரசியலில் தீவிரமாக செயல்பட்டபோது 2014 காலகட்டத்தில் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், 2019ம் ஆண்டு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு தொடர்ச்சியான உடல்நலக்குறைவால் முடங்கிய அவரை குழந்தைபோல கவனித்துக்கொண்டார் பிரேமலதா. இதற்கிடையில், கட்சிப்பணிகளில் கவனம் செலுத்திய அவர், 2018ம் ஆண்டு தேமுதிகவின் பொருளாராக நியமிக்கப்பட்டார்.

சில மாதங்களுக்கு முன்பு விஜயகாந்த் உயிரிழப்பதற்கு முன்பாக கட்சியின் பொதுக்குழு நிர்வாகிகளின் ஒப்புதலோடு பொதுச்செயலாளராகவும் மாறியுள்ளார். முன்னதாக, தனது கணவர் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டது முதலே, கட்சியை கவனித்து வரும் பிரேமலதா, அவரது மறைவுக்குப் பிறகு ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் ஒரே நம்பிக்கையாக மாறியுள்ளார். ஒரு சிறு கிராமத்தில் பிறந்து தேமுதிக எனும் கட்சியின் அதிகார மையமாக மாறியுள்ள அவருக்கு தொண்டர்கள், நிர்வாகிகள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

premalatha vijayakanth
அதிமுக - பாமக கூட்டணி உறுதி; ராமதாஸை சந்திக்கும் அதிமுக தொகுதிப் பங்கீட்டுக்குழு!

விஜயகாந்த் இருந்தவரை அவரது அலுவலகத்திற்கு எப்போது சென்றாலும் சாப்பாடு கிடைக்கும் என்ற போக்கு இருந்தது. இந்நிலையில், அவரது மறைவுக்குப் பிறகு “வள்ளல் விஜயகாந்த் மெமோரியல் அன்னதானம் டிரஸ்ட்” என்ற அறக்கட்டளையைத் தொடங்கி கட்சி அலுவலகத்தில் தினமும் வருபவர்களுக்கு அன்னதானம் வழங்கி விஜயகாந்த்தின் விருப்பத்தை நிறைவேற்றி வருகிறார் பிரேமலதா. கட்சிக்கு மட்டும் பொதுச்செயலாளராக, தொண்டர்களால் அண்ணி மற்றும் அன்னையாக அழைக்கப்படும் பிரேமலதா, அரசியலில் விஜயகாந்த் விட்டதை பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

premalatha vijayakanth
ஆளுநர் பதவி ராஜினாமா.. மீண்டும் தேர்தலில் களமிறங்கும் தமிழிசை.. புதுச்சேரியில் போட்டியா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com