தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். திரைப் பிரபலங்களும் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தேசிய தலைவர்கள் முதல் உள்ளூர் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள தேமுதிக கட்சி தொண்டர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடந்த 1990 ஆம் ஆண்டு விஜயகாந்திற்கும்- பிரேமலதாவிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த விஜய் பிரபாகரன் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இரண்டாவது மகன் சண்முகபாண்டியன் திரைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார். இவர்கள் இருவருக்கும் திருமணம் இதுவரை ஆகவில்லை.
தன்னுடைய மகன்கள் இருவருக்கும் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என விஜயகாந்த் முயற்சி செய்து வந்துள்ளார். மூத்தமகன் விஜய்பிரபாகரனுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெண் பிரித்து நிச்சயம் செய்யப்படத்தாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் நடிகர் விஜயகாந்திற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், விஜய்பிரபாகரனின் திருமணத்தை நடத்த முடியவில்லை எனத் தெரிகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த போதும் மகன்களுக்குத் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். மனைவி பிரேமலதாவிடம் அடிக்கடி கூறி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். கடைசி வரை தன் மகன்களுடைய திருமணத்தைப் பார்க்காமல் உயிரிழந்துள்ள சம்பவம் மேலும் சோகத்தை வரவழைத்துள்ளது.