தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியுள்ளது, தவெக தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாயார் ஷோபா ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மாநாட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், மாநாட்டின் செயல்திட்டம், தீர்மானங்கள் என்னவாக இருக்கப்போகின்றன என்ற கேள்விகள் பெரிதாக எழுந்துள்ளன.
தீர்மானங்களை பொறுத்தவரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் ”ஒரே நாடு ஒரே தேர்தல், நீட் தேர்வு தொடர்பான தீர்மானம், மகளிர் பாதுகாப்பு, மின் கட்டண உயர்வு” முதலிய விவகாரங்கள் உட்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்க வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தவெக தலைவர் விஜய் 4 மணிக்கு மாநாட்டில் பங்கேற்றார். தொண்டர்களின் நடுவில் ராம்ப்பில் நடந்து சென்ற விஜய், தொண்டர்கள் வீசிய கட்சி கொடியை தன் தோள்களில் போட்டுக்கொண்டு அனைவரையும் வரவேற்றார்.
தொடக்கத்தில் மிகப்பெரிய மகிழ்ச்சி வெள்ளத்தில் நடக்க ஆரம்பித்த விஜய், தொண்டர்களின் ஆர்ப்பரித்த அன்பு மழையில் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.
தொடர்ந்து மறைந்த சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்திய விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றிவைத்தார். 100 அடி உயரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பறக்க ஆரம்பித்துள்ளது. கட்சியின் கொள்கை, தீர்மானங்கள் தொடர்ந்து அறிவிக்கப்படவிருக்கின்றன.