செய்தியாளர் - பால வெற்றிவேல்
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சித் தொடங்கியுள்ள நடிகர் விஜய், கேரளாவிலும் கால் பதிக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பும் விதமாக கேரள விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றுள்ளது.
தமிழக வெற்றி கழகம் அலுவலகத்தில் கேரளாவை சேர்ந்த 14 மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். முதலில் பனையூர் கட்சி அலுவலகத்தில் நடத்த திட்டமிடப்பட்ட ஆலோசனைக் கூட்டம் பின்னர் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்றுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் காணொளி வாயிலாக பங்கேற்ற நிலையில் ஒருங்கிணைப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
கல்வி, சுகாதாரம், உணவு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் எப்படி பல்வேறு பகுதிகளிலும் செயல்பாடுகள் நடைபெற்றதோ அதேபோன்று கேரளாவிலும் விஜய் மக்கள் இயக்கத்தின் மக்கள் நல பணிகள் விரிவுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தையும் விரைவில் அரசியல் கட்சியாக மாற்றும் அளவிற்கு உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் எனவும் கேரள நிர்வாகிகளிடம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் கேரளாவில் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக உருமாற்றம் செய்வதற்கு ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை என கூறப்படுகிறது. விஜய்யின் மக்கள் நல திட்டங்களை கொண்டு சேர்ப்பதற்கு தயாராக இருப்பதாகவும், அதே நேரத்தில் நேரடி அரசியலில் விஜய் மக்கள் இயக்கம் கட்சியாக கேரளாவில் உருமாற்றம் அடைவதை விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கேரளாவில் இருந்து வந்த மாவட்ட தலைவர்களிடம் நாம் பேசியபோது, “கேரளாவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் மக்கள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்களாக எங்களிடம் கையெழுத்து பெறப்பட்டது” என தெரிவித்துள்ளனர். கட்சி அறிவிப்பு வெளியான நாளில் இருந்து விஜய்யின் பனையூர் அலுவலகம் பரபரப்பாக காட்சியளிக்கிறது.