தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து அக்கட்சியை சேர்ந்த லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மாநாட்டுக்கு செல்லும் வழியில் திருச்சியில் இருந்து வந்தவர்களில் இருவரும், சென்னையில் இருந்து சென்றவர்களில் மூவரும், செஞ்சியில் இருந்து சென்றவர்களில் ஒருவரும் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர்.
திருச்சியில் இருந்து சென்றவர்களில், விபத்துகளில் உயிரிழந்த தவெக நிர்வாகிகளின் உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த உயிரிழந்தவர்களது உறவினர்கள், இறப்புச் செய்தி மாநாடு தொடங்குவதற்கு முன்பே வந்துவிட்டாலும், மாநாட்டில் அவர்களும் எவ்விதமான இரங்கலும் தெரிவிக்கவில்லை, அறிக்கைகள் கூட வெளியிடவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இத்தகைய சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் திருச்சி உறையூரில் வைக்கப்பட்டு இருந்த உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், “நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த கழகத் தோழர்கள் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது. கழகத்திற்காக இவர்கள் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
கழகத் தோழர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன். மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கழகத் தோழர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.