பெங்களூர் மருத்துவமனை ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு செய்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருந்த சசிகலா நாளை மறுநாள் விடுதலையாக இருந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இதுகுறித்து பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சசிகலாவுக்கு கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் நேற்று முதல் ரத்தத்தில் சர்க்கரை அளவு 205ஆக அதிகரித்துள்ளதால் சசிகலாவுக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது. சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் பிரச்னையும் படிப்படியாக குறைந்துவருகிறது. சசிகலாவின் நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசிக்கும் திறன் சீராக உள்ளது.
அவர் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார். சசிகலா உடல்நிலை சீராக உள்ளது. உணவும் உட்கொள்கிறார். மற்றவர் உதவியுடன் நடக்கிறார். மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு செய்திருப்பதாக மருத்துமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஒரே அறையில் சசிகலாவுடன் தங்கியிருந்ததால் இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவரது உடல்நிலையும் சீராக உள்ளது எனவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.